அதிமுக-வின் கொபசெ ஆன பிரபல 90s நடிகை..பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

By John A

Published:

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க-வில் நிர்வாகியாக இருந்த நடிகை கௌதமி அண்மையில் அங்கிருந்து விலகி அதிமுக-வில் ஐக்கியமானார்.

இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கான பட்டியலில் நடிகை கௌதமிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பா.ஜ.க-வில் இருந்து விலகிய தடா பெரியசாமிக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மையினர்நலப் பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக சன்னியாசி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தீயாய் பரவிய தமிழ்த்தாய் வாழ்த்து போட்டி.. 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைச்சா விடுவாங்களா?

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பா.ஜ.க-வில் இணைந்து செயல்பட்டு வந்தார் கௌதமி. பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர் கௌதமியின் 25 கோடி மதிப்பிலான சொத்துக்களை மோசடி செய்து ஏமாற்றி விட்டார் என்று சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த வேளையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி. தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு அவருக்குக் கட்சியில் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.