Anshitha Vs Muthukumaran : பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வாரம் தற்போது ஆரம்பமாகி உள்ள நிலையில், இதில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. முதல் வாரம் தர்ஷிகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் நடந்து முடிந்த டாஸ்க்கின் இறுதியில் இரண்டாவது வார கேப்டனாக சத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே போல, இந்த சீசனில் பெண்கள் மற்றும் ஆண்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் போட்டியாளர் ஆண் அணியிலும், ஒரு ஆண் போட்டியாளர் பெண் அணியிலும் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் முதல் வாரத்தில் பவித்ரா ஆண்கள் அணியிலும், முத்துக்குமரன் பெண்கள் அணியிலும் இருந்து ஆடி இருந்தனர்.
அந்த வகையில், இந்த வாரம் தர்ஷா குப்தா ஆண்கள் அணியிலும், தீபக் பெண்கள் அணியிலும் இணைந்துள்ளனர். என்ன தான் அணி மாறினாலும், அவர்களின் அணியில் தான் விசுவாசம் இருக்கும் என்பதால் ஒரு குழுவாக எதிரணியை வீழ்த்துவதிலும் திட்டங்கள் போடுவதற்கு சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முத்துகுமாரனை பற்றி அவரிடமே பேசும் அன்ஸிதா, பெண்கள் அணியில் இருந்த போது நல்லவன் போல நடித்ததாகவும், இப்போது வேறு முகத்தை காட்டுவதாகவும் கூறுகிறார். “நான் விளையாடுறதுக்காக தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். பெண்கள் அணியை எதிர்த்து பயங்கரமா விளையாட போறேன். அதுனால நான் ரொம்ப மோசம் ஆனவன்” என முத்துக்குமரன் கூறுகிறார்.
உடனடியாக அன்ஸிதாவும், “முன்பு நீ இதே வேகத்தில் பேசும் போது அடக்கம் இருந்தது. ஆனால் இப்போது மோசமாக பேசுகிறாய்” என கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் முத்துக்குமரன், ‘நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கேன்’ என்கிறார். இதனைத் தொடர்ந்து முத்துக்குமரன் பற்றி பேசும் அன்ஸிதா, ஏதோ வானத்தில் இருந்து குதித்து வந்தவன் போல திமிர் காட்டுவதாகவும், நீ நடிக்கிறாய் என்றும் போடா என்றும் கூறி விடுகிறார்.
இதனை கேட்ட முத்துக்குமரன், போடா என அழைக்காமல் நான் எப்போது நடித்தேன் என்பதை உதாரணம் சொல்லி விளக்கும் படி கேட்கிறார். இதன்பின ஒரு கட்டத்தில் பொறுமையிழக்கும் அன்ஸிதா, எனக்கு உன்னிடம் பேச விருப்பம் இல்லை என்றும் நீ அமைதியாக இரு என்றபடி முத்துவிடம் கத்தி பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ‘நீங்கள் கண்டெண்ட் கொடுக்குறீர்கள்’ என முத்துக்குமாரன் அன்ஸிதாவை பார்த்து குறிப்பிடுகிறார். அந்த இடமே வார்த்தைகளால் பற்றி எரிய அன்ஸிதா அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். முத்துக்குமரனும் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் என்னை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நான் இங்கே அனைவரிடமும் நட்பாக இருப்பதற்காக வரவில்லை என்றும் விளக்கம் கொடுக்கிறார். ஆனால் அன்ஸிதா நான் நடிப்பதாக குறிப்பிடுவது எதை வைத்து அவர் கூறுகிறார் என்று தெரிய வேண்டும் என்கிறார்.
இன்னொரு பக்கம் அன்ஸிதாவோ பெண்கள் அணியில் முத்துக்குமரன் இருந்தபோது மிக அக்கறையாக இருந்ததாகவும் இப்போது பெண்களை மிக சாதாரணமாக எதிர்கொள்வதாகவும் தனது விமர்சனத்தை முன்வைக்கிறார். இதனால் அவர் நடிக்கிறார் என்றும் வாதமாக உள்ளது என்கிறார். இப்படி இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்ட சம்பவம் இரண்டாவது வார தொடக்கத்தையே பாரபரப்பாக மாற்றி உள்ளது.