பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையில் மோசடி செய்யும் கும்பலும் அதிகரித்து வருகிறது. எனவே, முதலீட்டாளர்கள் செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் மட்டும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றும், அதேபோல் அதிகாரப்பூர்வமற்ற நிறுவனங்கள் சொல்லும் டிப்ஸ்களை நம்பி ஏமாந்து பங்குகளை வாங்க கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
திடீரென சமூக வலைதளங்கள் மூலமாகவோ அல்லது மொபைல் போனில் வரும் மெசேஜ்கள் மூலமாகவோ சிலர் சில பங்குகளை வாங்க மட்டும் அழுத்தம் கொடுப்பார்கள். “இந்த பங்கு இன்னும் சில நாட்களில் உச்சமற்ற விலைக்கு உயரப்போகிறது” என்றும், “எனவே இந்த பங்குகளை உடனடியாக அதிக அளவு வாங்குங்கள்” என்று அழுத்தம் தரலாம். கண்டிப்பாக இது ஒரு மோசடி மெசேஜ் ஆகத்தான் இருக்கும். ஒரு நிறுவனத்தின் பங்கு உயரப்போகிறது என்றால், அந்த ரகசியமான தகவலை நமக்கு ஏன் சொல்ல வேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அந்த ரகசிய தகவலை வைத்து, மெசேஜ் அனுப்பும் நபரே பங்குகளை வாங்கி லாபம் பெறலாமே! எதற்காக உங்களுக்கு இலவசமாக இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதைக் கொஞ்சம் யோசித்தாலே, நீங்கள் மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இது போன்ற தகவல்கள் பெரும்பாலும் மோசடியாக இருக்கும் என்பதால், “இன்சைடர் டிப்ஸ்” என்று கூறப்படும் மெசேஜ்களைக் கண்டு நம்பாமல், தகுந்த முதலீட்டு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று பங்குகளை வாங்குவதே சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. “ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரே வாரத்தில் பத்தாயிரம் திரும்ப பெறலாம்” என்று உத்தரவாதம் கொடுக்கும் டிப்ஸ்கள் வந்தால், உடனே அதை மறந்துவிடுங்கள். ஏனென்றால், எந்த ஒரு முதலீட்டு திட்டமும் அப்படி நம்ப முடியாத அளவுக்கு வருமானத்தை தரும் என்பது சாத்தியமே இல்லை. எனவே, சந்தேகமே இல்லாமல் அது மோசடி என்பதை புரிந்துகொண்டு, இத்தகைய டிப்ஸ்கள் மூலம் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.