TNPSC Exam Schedule 2025| 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? டிஎன்பிஎஸ்சி முழு விவரம்

By Keerthana

Published:

சென்னை: 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. முழுமையாக வெளியிட்டுள்ளது. அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

அந்த அட்டவணையில், அடுத்த ஆண்டில் (2025) 7 விதமான தேர்வுகள் நடைபெறுவது குறித்து அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15-ந்தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலை மாதம் 13-ந்தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வுடன் கூடிய) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 7-ந்தேதியும், தேர்வு ஜூலை மாதம் 21-ந்தேதியும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு அல்லாத) தேர்வு குறித்த அறிவிப்பு மே மாதம் 21-ந்தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்டு 4-ந்தேதி தேர்வு நடத்தப்படும்..

டிப்ளமோ, ஐ.டி.ஐ. தரத்திலான தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் 13-ந்தேதியும், எழுத்துத்தேர்வு ஆகஸ்டு 27-ந்தேதியும் நடைபெற போகிறது. குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் 15-ந்தேதியும், முதல்நிலைத்தேர்வு செப்டம்பர் 28-ந்தேதியும், ஒருங்கிணைந்த சிவில் பணிகளுக்கான குரூப்-5ஏ தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் 7-ந்தேதியும், அவர்களுக்கான தேர்வு டிசம்பர் 21-ந்தேதியும் நடத்தப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. ஆண்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அட்டவணையில் மேலும் தேர்வு குறித்த அறிவிப்புகள் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு பதவிக்கும் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது பற்றிய அறிவிப்பு, அதற்கான அறிவிப்பாணை வெளியிடும்போது தெரிவிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.