அரண்மனைக்கு அழைத்த அரசர் சார்லஸ்.. வளர்ப்பு நாய்க்காக அந்த சந்திப்பையே ரத்து செய்த ரத்தன் டாடா.. எமோஷனல் பின்னணி..

By Ajith V

Published:

86 வயதில் இந்திய அணியின் மிக மிக முக்கியமான ஒரு நபர் உயிரிழந்திருந்தது சமீபத்தில் உலக அளவில் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. டாடா நிறுவனம் என நாம் சொன்னாலே உடனடியாக நமது நினைவுக்கு வருவது ரத்தன் டாடா என்ற பெயர் தான். இந்த ஒரு நபரின் மூலம் டாடா நிறுவனம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்ததுடன் மட்டுமில்லாமல் அனைத்து மக்களுக்குமான பொருட்கள் பலவற்றையும் தொடர்ந்து தயாரித்தும் வருகின்றது.

ரத்தன் டாடா நினைத்திருந்தால் இன்று உலக அளவில் முக்கியமான கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் சம்பாதித்த பணத்தின் பெரும் பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும் இயலாத மக்களுக்கும் கொடுத்து உதவி செய்ததுடன் மட்டுமில்லாமல் கிரிக்கெட் உள்ளிட்ட பல துறைகளிலும் பிரபலமாக துடிக்கும் வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப்பாக இருந்து உதவிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படி ரத்தன் டாடா என்ற ஒரு பெயர் அதிக பணமுள்ள ஒரு மனிதனின் முகத்தை பிரதிபலிக்காமல் மிக சாதாரணமாக அனைவருடனும் சகஜமாக பழகும் ஒருவரை பிரதிபலித்திருந்தது. சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ஆக்டிவாக இருந்து வந்த ரத்தன் டாடா, திருமணம் செய்யாமலேயே தனது வாழ்க்கையை முடித்து விட்டார். இது பற்றி பலமுறை அவர் ஏங்கியதாகவும் நிறைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்த நிலையில் அவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம் என கூறப்படுகிறது.

ரத்தன் டாடாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக ஏதாவது தொலைந்து போன நாய்கள் தொடர்பான தகவல்களை பகிர்வதுடன் தெரு நாய்கள் மீது மிக அன்பாக இருக்கும் ரத்தன் டாடா நிறைய நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். ஒருவர் நாய் மீது பிரியமாக இருப்பார் என நாம் சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிடலாம்.

ஆனால் ரத்தன் டாடாவோ தான் வளர்த்து வந்த செல்லப்பிராணி மீதிருந்த அன்பின் காரணமாக பக்கிங்காம் அரண்மனையில் இளவரசர் சார்லசுடன் முக்கியமான மீட்டிங்கில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை அப்போது இளவரசராக இருந்த மன்னர் சார்லஸ் கையில் இருந்து பக்கிங்கம் அரண்மனையில் ரத்தன் டாடா வாங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த பயணத்தை ரத்து செய்திருந்தார் ரத்தன் டாடா.

தான் செல்லமாக வளர்த்து வந்த நாய் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசர் சார்லசையே பார்க்கும் சந்திப்பை ரத்து செய்ததுடன் இந்த தகவல் பின்னர் சார்லசுக்கும் சென்று சேர்ந்தது. செல்லப் பிராணிகளின் மீது கொண்ட அன்பின் காரணமாக ரத்தன் டாடா தனது சந்திப்பை நிறுத்தியது பற்றி பேசியிருந்த சார்லஸ், அதனால் தான் டாடா நிறுவனம் இப்படி இருக்கிறது என்றும் இதுதான் ரத்தன் டாட்டா என்றும் மிகப் பெருந்தன்மையாக கூறியிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.