ஜிஎஸ்டி இணை இயக்குனர் நோட்டீஸ்.. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.. ஏன் தெரியுமா?

By Keerthana

Published:

சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹாரிஷ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜி எஸ் டி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திரைப்படங்களுக்கு இசையமைத்து சேவை வழங்கியதாகக் கூறி, அதற்காக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜுக்கு, ஜி எஸ் டி இணை இயக்குனர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது,

இந்த நோட்டீசை எதிர்த்து ஹாரிஷ் ஜெயராஜ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடன்த 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், தனது படைப்புகள் முழுவதும் தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக பதிப்புரிமை வழங்கி விட்டதால் ஜி எஸ் டி வரி விதிக்க முடியாது என்பதால், இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சரவணன் அமர்வு, வரி விதிப்பது தொடர்பான நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர முடியாது… சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் முறையிட முடியும் என உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஜி எஸ் டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் பதிலளிக்கலாம் எனவும், அதில் ஆட்சேபணைகளை முன்வைக்கலாம் எனவும் அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தது.

மேலும், ஹாரிஷ் ஜெயராஜின் ஆட்சேபணைகளை பரிசீலித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என ஜி எஸ் டி அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி (Maserati Granturismo S Coupe) எனும் இத்தாலி நாட்டு சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி, வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. மேலும், 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தக் கூறி கடந்த 2019ம் ஆண்டு வட்டார போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது . இதற்காக நீதிமன்ற படியேறிய ஹாரிஸ் ஜெயராஜ், நோட்டீசுக்கு தடை விதிக்க கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் நோட்டீசுக்கு அப்போது இடைக்கால தடை விதித்தது.