இன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகத்திற்கு மத்தியில் ஒருவருக்கு வேலை கிடைப்பதே பெரும் பாடாக இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் வேலையை தக்க வைத்துக் கொள்வதற்கு இருக்கும் பிரச்சனை அதை விட கொடியது. பல நிறுவனங்கள் கொடுக்கும் வேலையை விட, அவர்கள் கொடுக்கும் மன அழுத்தம் தான் அதிகமாக உள்ளது.
குறைந்த சம்பளத்தை கொடுத்து விட்டு அதை விட பல மடங்கு அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்றும் பலர் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு சூழலில் இளைஞர் ஒருவர், வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அதனை ராஜினாமா செய்த விஷயம் தான் தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலத்தில் எல்லாம் குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க வேண்டும் என்பது தான் பல முதலாளிகளின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் தான் சமீபத்தில் ஷ்ரேயாஸ் என்ற நபர், தான் பணிக்கு சேர்ந்த ஒரு நாளிலேயே ராஜினாமா செய்ததை பற்றி குறிப்பிட்ட மெயில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இவர் சமீபத்தில் ப்ராடக்ட் டிசைனராக ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. அப்படி இவர் பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே எந்தவித காரணமும் சொல்லாமல் அர்ப்பணிப்புடன் வேலை பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி அதிக நேரம் சம்பளம் எதுவும் அதிகம் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்றும் மேனஜர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வேலை – வாழ்க்கை சமநிலை (Work Life Balance) என்ற விஷயம் கேலிக்கூத்தானது என்றும் குறிப்பிட்டதுடன் புத்தகம் படிக்கவும், வேலையை தாண்டி மற்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்காக நேரத்தை ஒதுக்குவதையும் அவர் கேலி செய்ததுடன் அது ஒரு சாக்குப் போக்கு என்றும் நிராகரித்திருந்தார்.
அது மட்டுமில்லாமல் வேலையைத் தாண்டி இருக்கும் தனது பொழுதுபோக்கு அம்சங்களையும் குறை கூறியதுடன் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் அவரது மேனேஜர் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இது நியாயமற்ற மற்றும் மனிதாபமானம் இல்லாத செயல் என்றும் குறிப்பிடும் ஷ்ரேயாஸ், முதல் நாளிலேயே அங்கிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென முடிவு எடுத்து இவை அனைத்தையும் தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் நினைப்பதை போன்று வேலை பார்க்க வேறு யாராவது சிக்குவார்கள் என்றும், நான் வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்ட ஷ்ரேயஸ், எனக்கான நேரத்தை வேலையை தாண்டி செலவழிப்பதை விரும்பாத நிறுவனம் தனக்கு செட் ஆகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல ஊழியர்கள் மன அழுத்தத்தால் வேறு வழியில்லாமல் தொடர்ந்து பணத்திற்காக வேலை செய்தும் வருகின்றனர். இன்னொரு பக்கம், சமீபத்தில் தொடர்ந்து பல மணி நேரம் வேலை செய்து ஒருவர் உயிரிழந்ததும் அதிக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்தியில் தான் முதல் நாளிலேயே தனது வேலையை ராஜினாமா செய்த இளைஞரின் கடிதமும் அதிக கவனம் பெற்று வருகிறது.