ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலி

By Keerthana

Published:

ஈரோட்டில் கலைச்செல்வன் என்பவர் தனது தந்தையை பார்க்க ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்களை இறங்கிவிடுமாறு அவரது நண்பர் லிப்ட் கேட்டு வேண்டுகோள் வைத்தார். அதன்பேரில் சென்ற போது கார் மரத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலியாகினர். நிதி நிறுவன அதிபர் கலைச்செல்வன் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு மாணிக்கம்பாளையம் காவேரி நகரை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 26). நிதி நிறுவன அதிபர். கலைச்செல்வனின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரை பார்ப்பதற்காக கலைச்செல்வன் நேற்று அதிகாலை காரில் செல்ல தயாராகினார்.

இதையறிந்த அவருடைய நண்பர், கலைச்செல்வனிடம், ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்கள் இருப்பதாகவும், அவர்களை காரில் அழைத்துச்சென்று கோவையில் இறக்கி விடும்படியும் வேண்டுகோள் வைத்தார். இதனால் கலைச்செல்வன் நேற்று அதிகாலை பி.பி.அக்ரஹாரத்தில் இருந்து, அந்தியூர் மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மனைவி சவுந்தர்யா (25), கோவை சந்திராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த பட்டுராஜ் என்பவரின் மகள் ரிஜ்வானா (20) ஆகியோரை காரில் அழைத்து சென்றார்.

அதன்பின்னர் கலைச்செல்வன் அந்த 2 பெண்களுடன் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு நசியனூர் ரோட்டில் வில்லரசம்பட்டி அருகே சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. அதன்பின்னரும் கார் நிற்காமல் அருகே இருந்த மரத்தில் மோதி, 3 முறை உருண்டு ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலையோரம் கவிழ்ந்து கிடந்த காரை கிரேன் மூலம் மீட்டனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோட்டில் அதிகாலையில் நடந்த கார் விபத்தில் 2 இளம்பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.