டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கை

By Keerthana

Published:

சென்னை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படித்ததாக போலிச்சான்று அளித்த புகாரில் கோட்டாட்சியர், டி.எஸ்.பி. உள்பட 4 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. வணிகவரி துணை கமிஷனரான திருநங்கை சொப்னாவும் சிக்கி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

 

கடந்த 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் குரூப்-1 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில், தமிழ்வழிக்கல்வியில் பயின்றோருக்கான பணி ஒதுக்கீட்டில் அரசுப்பணி பெற்ற சிலர் முறைகேடு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நேரடியாக கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் படித்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும் இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி மதுரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்கத்தில் தமிழ் வழியில் படித்ததாக சான்றிதழ் சமர்ப்பித்து, 4 பேர் குரூப்-1 பணியில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதில், மதுரையில் வணிக வரித்துறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வரும் திருநங்கை சொப்னா, கோவை மாவட்ட கலெக்டரின் தனி உதவியாளராக பணிபுரிந்து வரும் சங்கீதா, சேலம் மாவட்டம் ஆத்தூர் சரக டிஎஸ்பியாக பணிபுரிந்து வரும் சதீஷ்குமார், முன்னாள் போலீஸ் துணை சூப்பிரண்டும், தற்போது காஞ்சீபுரம் பயிற்சி ஆர்.டி.ஓ.வாக உள்ள கலைவாணி ஆகிய 4 பேர் போலி சான்றிதழ்கள் கொடுத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இவர்களில் சொப்னா, இளங்கலை படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளை மதுரையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் பயின்ற நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் இளங்கலை தமிழ் படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும் ஒரே ஆண்டில் தேர்வெழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியும் பெற்றதாக அவர் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார். மேலும் பல்கலைக்கழக விதிகளின்படி முறையாக கட்டணங்களை அவர் செலுத்தவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேபோல டிஎஸ்பி சதீஷ்குமாரின் மதிப்பெண் பட்டியலில் பல்வேறு திருத்தங்கள் உள்ளன. காஞ்சீபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கலைவாணி, கோவை மாவட்ட கலெக்டரின் தனி உதவியாளர் சங்கீதா ஆகியோரும் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் சேர்க்கை மற்றும் கல்விக்கட்டணங்களை முறையாக செலுத்தாமல் தேர்வெழுதி தமிழ்வழிக்கல்வி சான்றிதழ் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் முறைகேடாக தமிழ்வழிக் கல்வி சான்றிதழ் பெற உடந்தையாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தொலைநிலைக்கல்வி இயக்கக எஸ்.சி. எஸ்.டி. பிரிவு கண்காணிப்பாளர் புருசோத்தமன், தேனியைச் சேர்ந்த கல்வி நிறுவன நிர்வாகி முரளி, நாராயணபிரபு, கோவையைச் சேர்ந்த கல்வி நிறுவன நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் இருந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது..

இதனை தொடர்ந்து முறைகேடாக அரசு பணி பெற்ற 4 பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 5 பேர் என மொத்தம் 9 பேர் மீதும், மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.