இந்தியாவின் முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்.. எவ்வளவு கட்டணம்? எந்த மாநிலத்தில்?

By Bala Siva

Published:

 

இந்தியாவின் வந்தே பாரத் ரயில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் கூட சில வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் ஸ்லீப்பர் ரயில், டெல்லி மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் வகையில், விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் இருந்து ஸ்ரீநகர் வரை 13 மணி நேர பயணம் செய்யும், 800 கிலோமீட்டர் தூரத்தில், வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மாலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில், மறுநாள் காலை 8 மணிக்கு ஸ்ரீநகரை சென்றடையும்.

இந்த ரயிலில் ஏசி 3 டயர், ஏசி 2 டயர், ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆகிய வகுப்புகள் இருக்கும். ஏசி 3 டயர் கட்டணம் 2000 ரூபாய், ஏசி 2 டயர் கட்டணம் 2500 ரூபாய், மற்றும் ஏசி பர்ஸ்ட் கிளாஸ் கட்டணம் 3000 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும், இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய தலைநகரத்திலிருந்து ஸ்ரீநகர் வரையிலான இந்த ரயில் பயண நேரத்தை குறைக்கும் என்றும், இரவு நேர பயணத்திற்கான வசதி உண்டு என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படும் என்றும், இதற்கு கிடைக்கும் வரவேற்பு பொறுத்து, மற்ற இரண்டு இந்திய நகரங்களுக்கு இடையேயும் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.