மது விற்பனையை குறைக்க வேண்டும், மது கடைகளை மூட வேண்டும் என்று ஒரு பக்கம் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் மது விற்பனைக்கென தனி செயலி மற்றும் ஹோம் டெலிவரி என கேரள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில மது விற்பனை செய்யும் அமைப்பு ‘இ-காம்’ செயலியை அறிமுகம் செய்துள்ளதாகவும், இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் மது பொருட்களை நேரடியாக இணையத்தில் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான மது வகைகளை ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மது வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும் என்றும், அதற்கான வயது சரிபார்ப்பு அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மது பொருட்களை ஆன்லைனில் பார்வையிடுதல், முன்பதிவு செய்தல், அருகில் இருக்கும் மது கடைகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்தல், அந்த இடத்திற்கு செல்வதற்கான வழிமுறையை கூகுள் மேப்ஸ் மூலம் அறிவுறுத்தல் ஆகிய வசதிகள் இந்த செயலியில் உள்ளன.
வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான மது வகைகளை தேர்வு செய்து, பணத்தை செலுத்தினால் அவர்களுக்கான மதுவகைகள் உடனே கிடைக்கும். ஆனால், அதே நேரத்தில் மது வகைகள் வீட்டில் டெலிவரி செய்யப்படாது, ஆர்டர் காப்பியை எடுத்துக் கொண்டு, செயலியில் பதிவு செய்த மது கடைகளுக்கு சென்றால், வரிசையில் நிற்காமல் நேரடியாக மது வகைகளை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை அறிமுகம் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை முன்பதிவு செய்து சிரமமின்றி மது வகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.