இந்த உலகின் பல இடங்களில் அமானுஷயம் நிறைந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. பல விஷயங்களில் இன்று உலக அளவில் நாம் வளர்ச்சி கண்டாலும் இன்னும் அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட கதைகள் தொடர்பான செய்திகள் வெளிவரும் போது அவை ஒருவிதமான பயத்தையே மக்கள் மத்தியில் உருவாக்கும்.
ஒரு சிலர் இன்னுமா பேய் கதைகளை எல்லாம் நம்பி கொண்டிருக்கிறீர்கள் என கேட்டாலும் இன்னொரு பக்கம் பலரும் அதனை நம்புவதுடன் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் இங்கிலாந்தில் உள்ள ஒரு பழைய பாழடைந்த சிறை குறித்து தெரிய வந்த தகவல் அனைவரையும் ஒரு நிமிடம் சில்லிட வைத்துள்ளது.
இங்கிலாந்தின் மெர்ஸிசைடு (Merseyside) என்னும் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது Prescot என்ற நகரம். இங்கே தான் ஒரு பாழடைந்த சிறைச்சாலை அமைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தான் சமீபத்தில் அங்கே சென்ற நபர் ஒருவர் இணையத்தில் பகிர, அவை பார்ப்பதற்கே பயத்தை உருவாக்குகிறது.
அது மட்டுமில்லாமல், இங்கே நடந்த சில சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நிச்சயம் ஒருவித பயத்தையே கொடுக்கும். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த சிறைச்சாலை மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 1890 முதல் இது இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சிறைச்சாலை அடைக்கப்பட்டு 13 ஆண்டுகளான நிலையில் கூரைகள் அனைத்தும் விழுந்தும், கண்ணாடிகள் உடைந்தும் கிடப்பதாக புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
ஆனால், அதே வேளையில் இந்த சிறைச்சாலை இயங்கி வந்த சமயத்திலேயே பல அமானுஷ்ய சத்தங்களையும் அங்கிருந்த கைதிகள் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இதே போல, முன்பு போலீஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வந்த போதும் கூட இரவு நேரத்தில் ஒருவர் வந்ததாகவும் திடீரென அவரை பின்தொடர்ந்து மேல் தளத்திற்கு சென்றதும் அவர் காணாமல் போனதையும் அறிந்துள்ளனர்.
இப்படி பல அமானுஷ்ய சம்பவங்கள் இங்கே அரங்கேறி இருக்க, ஒருமுறை பெண் ஒருவர் பழங்காலத்து உடை அணிந்து அங்கே நின்றதாகவும், அருகே செல்ல பயந்து இந்த கதையை வெளியிலேயே சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த நபர் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்ததும் பின்னர் தெரிய வந்துள்ளது.
மேலும் 2011 ஆம் ஆண்டு சில காரணங்களால் இந்த சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாழடைந்து கிடந்த இந்த இடத்தை வாங்கி அபார்ட்மெண்ட்களாக மாற்றும் நோக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்கி உள்ளனர். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, ஐந்து ஆண்டுகளாக இன்னும் 2011 ல் இருந்தது போலவே தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அபார்ட்மெண்ட்டுகளாக தயார் செய்யும் நோக்கில் வாங்கப்பட்ட அமானுஷ்ய சிறைச்சாலை பற்றிய செய்தி தற்போது அதிகம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.