iQOO, Poco, OnePlus ஆகிய மூன்று நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய சில்லறை மொபைல் விற்பனையாளர்கள் சங்கம் இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு இந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவை பொருத்தவரை, எந்த வகை மொபைல் பிராண்டுகள் ஆன்லைனிலும், சில்லறை விற்பனை கடைகளில் வாங்கிக் கொள்ளும் வசதியை பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அளித்துள்ளன. ஆனால், மேற்கண்ட மூன்று நிறுவனங்கள் முழுக்க முழுக்க அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன என்றும், இந்த வகை போன்களை சில்லறை விற்பனையாளர்களுக்கான விற்பனை செய்யும் உரிமையை வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, சில்லறை மொபைல் விற்பனை நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் இந்த மாடல்கள் வெளிவருவதில்லை என்றும், இது சட்ட விரோதம் என்றும் அகில இந்திய மொபைல் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, மத்திய அரசு தலையிட்டு, மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் விற்பனையை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.