இப்படி ஒரு நல்ல மனசா..! பட வெற்றி விழாவில் நடிகர் செய்த செயல்.. எமோஷனல் ஆன துணை நடிகர்கள்

By John A

Published:

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் வெற்றி விழாக்களில் சம்பந்தப்பட்ட முன்னனி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். ஆனால் தற்போது நடைமுறை மாறி விட்டது. படத்தின் ஹீரோ, இசையமைப்பாளர்களுக்கு கார் வாங்கித் தருவது, தங்கச் சங்கலி பரிசளிப்பது என டிரெண்ட் மாறி விட்டது. ஆனால் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் பட வெற்றி விழா என்றால் அதுவே பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும்.

அப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்தின் வெற்றி விழாவில் நடிகர் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அதையே அடுத்தடுத்து பின்பற்றும் முறை வந்தது. திரைக்கதை மன்னன் இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பின்னர் கன்னி ராசி என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன்.

இப்போது சுந்தர் சி இருப்பது போல் அப்போதைய படங்களின் டைமிங் காமெடி நாயகன். பாண்டியராஜன் படங்கள் என்றாலே ஹியூமர், காமடிக்கும் பஞ்சமே இருக்காது. கலகலப்பான குடும்பங்களில் நடித்துப் பெயர் பெற்றார். இளைய திலகம் பிரபு, ரேவதி நடிப்பில் உருவான கன்னிராசி படத்தினை முதன் முதலாக இயக்கி வெற்றி கண்டார்.

இதனைத் தொடர்ந்து இன்றும் இந்தப் படத்தினைப் டிவியில் போட்டால் ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆண்பாவம் என்ற படத்தினை நடித்து இயக்கினார். இதில் பாண்டியன் ஹீரோவாகவும், ரேவதி, சீதா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். பாண்டியன் தம்பியாக பாண்டியராஜன் நடித்திருப்பார்.

ஆண்பாவம் படத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. காட்சிக்குக் காட்சி காமெடியில் கலக்கியிருப்பார் பாண்டியராஜன். இந்தப் படத்தின் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக ஆண்களின் காதல் தோல்வி பாடலையே காதல் கசக்குதய்யா என கலகலப்பான பாடலாக மாற்றி டிரெண்டிங் ஆக்கியவர் பாண்டியராஜன். இந்தப் பாடல் ரசிகர்களிடம் அமோக வெற்றி பெற்றது.

ஆண்பாவம் படம் 1985-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்ற போது இயக்குநர் பாண்டியராஜன் அனைவருக்கும் ஷீல்டு வழங்கி கௌரவித்தார். அப்போது இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. காதல் கசக்குதய்யா பாடலில் குரூப் டான்சர்களாக ஆடிய அனைவருக்கும் ஒவ்வொருவரின் பெயரையும் தனியே அழைத்து அவர்களுக்கும் ஷீல்டு வழங்கி கௌரவித்தார். தமிழ் சினிமாவில் இதுபோன்று வெற்றி விழாக்களில் குரூப் டான்சர்களை யாரும் இப்படி கௌரவித்தது கிடையாது.

ஷீல்டு வாங்கிய அனைவரின் முகத்திலும் பேரானந்தம். தங்களுக்கும் அங்கீகாரம் கொடுத்து மேடையேற்றிய இயக்குநர் பாண்டியராஜனை வாயாரப் புகழ்ந்தனர் நடனக் குழுவினர்.