இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் ஷர்மா தனது அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே வேளையில் அவரது பேட்டிங் உள்ளிட்ட சில விஷயங்கள் ஏதாவது ஒரு முக்கியமான போட்டிகளில் அதிக விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்திற்குள் இந்திய அணியை மூன்று ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றிருந்த ரோஹித் ஷர்மா, இந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை வெல்லவும் முக்கிய பங்கு வகித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தொடக்க வீரராக இந்த உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆரம்பத்திலேயே இந்திய அணியின் ரன் ஏற உதவி இருந்தார்.
அவரது அதிரடியால் பின் வரும் வீரர்கள் நிதானமாக நெருக்கடியின்றி ரன் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்திருந்தனர். இப்படி ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் டி20 உலக கோப்பைத் தொடரில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
3 ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக ஆடாமல் போன ரோஹித் ஷர்மா, நிச்சயம் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுப்பார் என கருதப்பட்டது. ஆனால் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 6 மற்றும் 5 ரன்கள் தான் எடுத்திருந்தார்.
இதனால் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம், அதிக விமர்சனத்தை சந்தித்து வந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது நல்ல ஒரு பங்களிப்பை இந்திய அணிக்காக பேட்டிங்கில் அளிப்பார் என கருதப்பட்டது. முதல் இன்னிங்சில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து இந்திய அணி பல சாதனைகள் புரிந்திருந்தது.
இதில் தொடக்க வீரராக உள்ளே வந்த ரோஹித் ஷர்மா, முதல் 2 பந்துகளில் சிக்ஸர் அடித்து சாதனையை செய்த அவர், சச்சின் டெண்டுல்கர், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பிறகு இந்த லிஸ்டில் இடம்பிடித்திருந்தார். ஆனால், அதே நேரத்தில் 11 பந்துகள் வரை ஆடிய ரோஹித் ஷர்மா, 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டாலும் ரோகித் 7 பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். முதல் இன்னிங்சில் அதிரடி காட்டினாலும் அதனை இரண்டாவது இன்னிங்சில் தொடர முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தார். வங்கதேச அணிக்கு எதிராக இதுவரை ரோஹித் ஆடிய டெஸ்ட் போட்டியில் 6, 6, 21, 6, 5, 23, 8 ரன்களை தான் அடித்துள்ளார்.
இதில் ஒருமுறை கூட அவர் 25 ரன்களை கடந்ததில்லை. அப்படி ஒரு சூழலில் தான் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் சராசரியில் சரிவு ஒன்றை சந்தித்துள்ளார். நிறைய சிறந்த இன்னிங்ஸ்களை டெஸ்ட் அரங்கில் வெளிப்படுத்தி உள்ள ரோஹித்தின் டெஸ்ட் சராசரி கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக 44 க்கும் கீழ் குறைந்துள்ளது.