வாழ்வில் கஷ்டங்கள் நஷ்டங்கள் போன்றவை வருவது சகஜம்தான். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ந்து கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பது போல் இருக்கும். எந்த முன்னேற்றமும் வாழ்க்கையில் இல்லையே என்று வருந்துவார்கள். அப்படி தொடர்ந்து வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்து வருபவர்கள் தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இனி காண்போம்.
அனைத்து தெய்வங்களுக்கும் முழு முதல் கடவுளாக இருப்பவர் விநாயகர். வழிபாட்டிற்கு எளிமையாக இருக்கும் விநாயகரின் கீர்த்தி அவ்வளவு பெரியது. விநாயகருக்கு உகந்த திதி தான் சங்கடகர சதுர்த்தி ஆகும். பௌர்ணமி அடுத்த நான்காவது நாள் சங்கடஹரா சதுர்த்தி நிகழும். அன்றைய தினம் நம் சங்கடங்கள் போக்க விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
நாம் எந்த ஒரு விரதத்தை தொடங்க வேண்டும் என்று விரும்பினாலும் சங்கடஹார சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகு தான் கிருத்திகை ஏகாதசி பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாதம்தோறும் வரும் சதுர்த்தி தினங்களை கணக்கிட்டு விரதம் இருக்க வேண்டும். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அரச மரத்தடியில் இருக்கும் விநாயகர் என்றால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
விநாயகரை தரிசித்துவிட்டு அவரை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து விநாயகரை அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். கோவிலுக்கு சென்று விநாயகரை வணங்கி விட்டு வீட்டுக்கு வந்ததும் விளக்கேற்றி விநாயகர் அகவல் விநாயகர் துதி பாட வேண்டும்.
பூஜையின் போது அவருக்கு பிடித்த உணவுகளான மோதகம், சித்ரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை தயாரித்து விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அன்றைய தினம் யாருக்கேனும் அன்னதானம் செய்யலாம். இப்படி சங்கடகர சதுர்த்தி விரதத்தை தொடர்ந்து 11 முறை 11 மாதங்கள் கடைபிடிக்கும்போது நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.