இந்தியாவில் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்த வருடம் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் தந்தை எனப்படும் தாதா சாகேப் பால்கேவின் நூறறாண்டு விழாவான 1969-லிருந்து இவ்விருதானது வழங்கப்படுகிறது.
இதுவரை இந்த விருதினை சத்தியஜித்ரே, கன்னட நடிகர் ராஜ்குமார், பாடகி லதா மங்கேஷ்கர், திலீப்குமார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஆஷா போன்ஸ்லே, கே. பாலச்சந்தர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப்பலங்கள் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது தாதாசாகேப் பால்கே விருதானது மிதுன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்கத்தாவில் பிறந்த மிதுன் சக்கரவர்த்தி இந்தி மற்றும் பெங்காலிப் படங்களில் முக்கிய நடிகராக அறியப்படுகிறார். மூன்று தேசிய விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்டவைகளைப் பெற்ற மிதுன் சக்கரவர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. பாலிவுட்டில் ஒரே ஆண்டில் 19 படங்களில் ஹீரோவாக நடித்த ஒரே பெருமைக்குரியவர் என்ற சாதனையைப் பெற்றிருக்கிறார் மிதுன் சக்கரவர்த்தி. இன்றுவரை அந்த சாதனை உடைக்கப்படவில்லை.
1976-ல் மிருகயா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த மிதுன் சக்கரவர்த்தி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். தொடர்ந்து நடித்து வந்தவர் 1982-ல் வெளியான டிஸ்கோ டான்சர் படம் இவரை உச்ச நட்சத்திரமாக்கியது. இப்படம் ரஷ்யாவில் மாபெரும் வெற்றி பெற ஆசியாக் கண்டத்தின் முக்கிய நடிகராக மிதுன் சக்கரவர்த்தி அறியப்பட்டார். மேலும் சினிமா தொழிலாளர்களின் குறைகளைக் களையும் வகையில் சினி அண்டு டிவி ஆர்ட்டிஸ்ட் அசோஷியேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மிதுன் சக்கரவர்த்தி தற்போது பா.ஜ.க-வில் செயல்பட்டு வருகிறார்.