நாளுக்கு நாள் ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் நிலையில், இந்த தொழில்நுட்பம் இல்லாமல் எதிர்காலத்தில் எந்தப் பணியும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இப்போதே மருத்துவத்துறை முதல் சினிமா துறை வரை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. இந்தப் பின்னணியில், தற்போது ஒரு புதிய ஏ.ஐ. தேடுபொறி அறிமுகமாகி உள்ளது, இது கூகுளுக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தேடுபொறி என்றால் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது Google தான். இதைத்தொடர்ந்து YouTube, TikTok போன்ற சில சமூக வலைதளங்களும் இப்போது அதே போல் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, புதிய ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கான்சென்சஸ்.ஆப்’ எனும் தேடுபொறி அறிமுகமாகி உள்ளது. இதில் தேடும் முடிவுகள் அறிவியல் பூர்வமான ஆய்வு கட்டுரைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. இது ChatGPT போலவே கேள்வி வடிவில் தேடலாம், ஆனால் பதில்கள் முழுக்கவும் துல்லியமான, அங்கீகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன, எனவே இதன் பதில்கள் மற்றவைகளிலிருந்து மாறுபடுகின்றன.
மேலும், நாம் கேட்கும் கேள்விகளை இந்த தேடுபொறி எவ்வாறு புரிந்து கொள்கிறது, முடிவுகளை எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பதற்கான விளக்கமும் தரப்படுகிறது. இதனால், இங்கே வழங்கப்படும் பதில்கள் பெரும்பாலும் உண்மையானவை என்றும் கூறப்படுகிறது.
Google தேடுபொறியை விட இதில் கிடைக்கும் தகவல்கள் அதிக நம்பகத்தன்மையுடன் இருப்பதாக இதைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இந்த ஏ.ஐ. தேடுபொறி பொதுமக்கள் மத்தியில் பிரபலமானால், Google-க்கு போட்டியாக உருவாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.