நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பு.. லப்பர் பந்து திரைப்படம் குறித்து ஹர்பஜன்சிங் போட்ட எக்ஸ்தளப் பதிவு..

By John A

Published:

தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் எப்போதாவது சில படங்கள் கொண்டாடப்படும். அந்தப் படங்கள் எந்த விளம்பரமும் இன்றி நல்ல விமர்சனங்களால் ரசிகர்களால் மீண்டும் பார்க்கப்பட்டு ஓர் உலக சினிமா படைப்பாக வெற்றி பெறும். அப்படி எந்த விளம்பரமும் இன்றி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களுடன் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் லப்பர் பந்து. இயக்குநர் அருண்ராஜா காமராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்துவின் முதல் திரைப்படம். அறிமுகப் படத்திலேயே சினிமாவை நன்கு புரிந்து கொண்டு ஸ்கோர் செய்து விட்டார்.

இதில் அட்டகத்தி தினேஷின் கெத்து கதாபாத்திரமும், நடிகை ஸ்வாசிகாவின் கதாபாத்திரமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இப்போது சமூக வலை தளங்கள் முழுக்க லப்பர் பந்து படத்தினைச் சுற்றியே வருகிறது. கிராமத்தில் கிரிக்கெட் போட்டியும், அதில் இருக்கும் அரசியல், தீண்டாமை, குடும்ப சூழ்நிலை போன்றவை குறித்து இயல்பாகப் பதிவு செய்திருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. மேலும் படம் முழுக்க வரும் கேப்டன் விஜயகாந்தின் குறியீடுகளும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்தது.

கார் ரேஸிங் அணிக்கு ஓனரான அஜீத்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

இப்படி கிரிக்கெட் விளையாட்டை வைத்து இப்படியும் கதை எழுத முடியுமா என்று வியக்க வைத்து வெற்றியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன். இந்தப் படம் குறித்து ஏற்கனவே கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டி தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், திரைப்பட நடிகருமான ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதளப்பக்கத்தில் லப்பர் பந்து படம் குறித்து பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார். அதில், ”என்னோட அடுத்த தமிழ்ப்பட டைரக்ஷன் டீம் சொன்னாங்க.. சார் லப்பர் பந்துனு படம் வந்திருக்கு.. கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கு பாருங்கன்னு” கிரிக்கெட் மேல நீங்க வச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா..என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே ஹர்பஜன் சிங் தமிழில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.