உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அதற்காக நான்கு நாட்கள் மெடிக்கல் லீவ் வேண்டும் என்று பெண் ஊழியர் ஒருவர் கேட்டபோது அதற்கு மேனேஜர் மறுத்ததாகவும் இதனை அடுத்து தகுந்த சிகிச்சை பெறாததால் அந்த பெண் பலியானதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெல்டா எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தில் மே என்ற பெண் ஊழியர் பணிபுரிந்து கொண்டு வந்தார். அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவரிடம் ஆலோசித்த போது மருத்துவர் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற வேண்டும், சிகிச்சைக்கு பின் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து செப்டம்பர் 5 முதல் 9 வரை தனக்கு மெடிக்கல் லீவ் வேண்டும் என்று மேனேஜரிடம் கேட்டபோது மேனேஜர் லீவ் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வேலைக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைத்த அந்த பெண், சிகிச்சை பெறாமல் மறுநாள் வேலைக்கு வந்துள்ளார். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்ததாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைப்புச் சென்றபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து சம்பந்தப்பட்ட மேனேஜரிடம் விசாரணை செய்யப்படுவதாகவும் அந்த பெண்ணின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வரை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.