விடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்

By John A

Published:

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புரடக்ட்ஸ் நிறுவனம் மீது புகார் கொடுத்துள்ளது. திருப்பதி போலீசார் இந்நிறுவனம் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக நடிகர் கார்த்தி லட்டு இப்போ சென்சிடிவான விஷயம் என்று சிரித்துக் கொண்டே கூறியதும் ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாணுக்கு கோபத்தை ஏற்படுத்த கார்த்திக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். பதிலுக்கு கார்த்தியும், சூர்யாவும் மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வைத்தனர்.

திருப்பதியில் தரிசனம் செய்ய இனி வேற்று மதத்தினருக்கு இது கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்பு

இந்நிலையில் லட்டு குறித்த மீம்ஸ்களும், டிரோல் வீடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. சோஷியல் மீடியாக்களிலும் லட்டு குறித்த மீம்ஸ்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. திருப்பதி லட்டு பிரசாதம் பற்றி பரிதாபங்கள் யூடியூப் சேனல் கோபி-சுதாகரும் தங்களது சேனலில் லட்டு பாவங்கள் என்ற பெயரில் அதைக் கிண்டலடித்து வீடியோ வெளியிட்டனர்.

ஆனால் வீடியோ வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே அதனை டெலீட் செய்து விட்டு மன்னிப்பும் கேட்டனர். இருப்பினும் இந்த வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழக பா.ஜ.க சார்பில் ஆந்திர டிஜிபி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்துக்களின் மத உணர்வினைப் அவமதிக்கும் நோக்கில் லட்டு பாவங்கள் வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பரிதாபங்கள் சேனலில் பரிதாப நிலையில் கோபியும் சுதாகரும் உள்ளனர்.

தமிழக பா.ஜ.க-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜாவின் ஒப்புதலுடன் அமர்பிரசாத் ரெட்டி இந்தப் புகார் மனுவை அளித்துள்ளதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.