செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்

By John A

Published:

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜுன் மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது அவருக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு தற்போது உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

ஸ்பேம் அழைப்புகளுக்கு முடிவு கட்டிய ஏர்டெல்.. இனி இந்த மாதிரி போன் வந்தாலே எச்சரிக்கும் AI

செந்தில் பாலாஜி மீதான ஜாமின் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அரசுத் தரப்பில் அமலாக்கத்துறை சார்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரான ராம் சங்கர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த காரணத்தினாலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குப் பிறகு இன்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்
ரூ. 25 லட்சத்திற்கு இருநபர் உத்தரவாதம்
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
சாட்சிகளைக் கலைக்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதனையடுத்து அவரின் சொந்த ஊரான கரூரில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் செந்தில் பாலாஜியின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்துத் தெரிவித்துள்ளனர்.