பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு இன்று 4-வது நினைவு நாள். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். திரைத்துறையில் பல சாதனைகளுக்குச் சொந்தக் காரரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் பல கோடி ரசிகர்களைக் கவர்ந்தவர்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவாகவும், அவரது சாதனைகளைப் போற்றும் வகையிலும் அவர் வசித்த சென்னை காம்தார் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லம் அமைந்த தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெயரைச் சூட்ட வேண்டும் என அவரது மகனும், பிரபல திரைக் கலைஞருமான எஸ்.பி.பி.சரண் நேற்று முதல்வர் அலுவலகத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், எஸ்.பி.பி. சரணின் வேண்டுகோளை ஏற்றம், மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் வகையிலும் அவர் வசித்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பகுதியில் அவர் வாழ்ந்த தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்ர மணியம் சாலை என முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார்.
நேற்று எஸ்.பி.பி.சரண் வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று அவரது நினைவுநாளில் அவர் பெயரில் சாலையின் பெயர் சூட்டி அவருக்கு கௌரவம் கிடைக்கச் செய்த தமிழக அரசுக்கு நன்றி என ரசிகர்கள் அகமகிழ்ந்துள்ளனர்.
மேலும் அவரது சொந்த ஊரான நெல்லூர் மாவட்டத்தில் அவருக்கு நினைவு இல்லம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்து மட்டுமல்லாமல், தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளுக்கும் சொந்தக்காரராக விளங்கினார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.