நந்தன் படத்துக்கு தமிழக அரசின் உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும்.. இயக்குநர் கோபி நயினார் கோரிக்கை

By John A

Published:

நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் நந்தன். உடன்பிறப்பே, கத்துக்குட்டி ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் ஆதிக்க சமூக கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிந்த சசிகுமாரை இந்தப் படத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவராக நடித்திருக்கிறார். சசிக்குமாருடன் பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த அம்பேத்குமார் (சசிக்குமார்) வசிக்கும் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. இவர் வசிக்கும் கிராமம் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட அதுவரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த கோப்பு லிங்கம் (பாலாஜி சக்திவேல்) அம்பேத் குமாரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்று அதிகாரத்தை தானே வைத்துக் கொள்கிறார். அதிகாரத்தை சசிக்குமார் கைப்பற்றினாரா என்பது தான் கதை.

இந்தப் படத்தினைப் பார்த்த அறம் படத்தின் இயக்குநரும், சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனை கொண்டவருமான கோபி நயினார் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஓர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

விஜய் வேண்டாம்… அனிருத் மட்டும் வேணுமா? யாருப்பா அந்த நடிகை?

அதில் நந்தன் திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால் தமிழக அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் நந்தன் திரைப்படத்தினை அவசியம் காண வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.

இதற்கு முன்னர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படமும் இதேபோன்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. இந்தப் படம் கமர்ஷியல் கலந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோன்று நந்தன் படமும் இதே அரசியலைப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.