திருச்செந்தூர் முருகனை தரிசிக்க விரைவு கட்டணம் இவ்ளோ ஓகேவா..? பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்..

By John A

Published:

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ் பெற்றது. சூரனை வதம் செய்து கடற்கரையில் சுப்ரமணியராக முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். இங்கு வந்து முருகப் பெருமானை தரிசித்தால் வினைகள் யாவும் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். மேலும் இங்குள்ள நாழி தீர்த்தக் கிணற்றில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிட முருகப் பெருமானை வேண்டுவர். திருச்செந்தூரில் வருடந்தோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது மிகப் பிரபலமானது. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த 7 நாட்களும் திருச்செந்தூரில் தங்கி கடுமையான விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை வணங்குவர். இறுதிநாளான சூரசம்ஹாரத்துடன் விழாவானது நிறைவடைந்து மறுநாள் திருப்பரங்குன்றத்தில் திருக்கல்யாணம் நடைபெறும்.

சபரிமலை அய்யப்பன் கோயிலை அதிர வைத்த சம்பவம்.. ரகசிய விசாரணையால் சிக்கிய தென்காசி இளைஞர்

இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழாவானது வருகிற நவம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கந்த சஷ்டி விழாக் காலத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழக்கத்தினை விட கூடுதலாக வழங்கப்படும். இந்நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகளின் விலையை ரூ.1000 என நிர்ணயித்து திருக்கோவில் நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் விலை ரூ. 1000 என நிர்ணயம் செய்திருப்பது குறித்து பொதுமக்களும், பக்தர்களும் தங்களது கருத்துக்களையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதி வருகிற அக்டோபர் 3 என்று கூறப்பட்டுள்ளது.