கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிகுந்த பணிச்சுமையால் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் அரபு நாட்டைச் சேர்ந்த ஆடிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா செபாஸ்டியன் என்ற பெண் அதிக பணிச்சுமையால் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. நாடெங்கிலும் இந்தச் செய்தி பரபரப்பினை ஏற்படுத்தியது.
பொதுவாக ஐடி துறைகளைச் சார்ந்தவர்களுக்கு வேலை நேரம் என்பது அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு காலையில் வீட்டு வேலைகளைச் செய்து முடித்து அவசர அவசரமாக அலுவலகத்திற்கு வந்து ஓய்வில்லாமல் பணியாற்றி திரும்பவும் வீட்டிற்குச் சென்று மறுபடியும் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் போது ஓய்வே இல்லாமல் இருக்கிறது. இதனால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இப்படி பெண்கள் வேலை செய்யும் நேரத்தினை எடுத்துக் கொண்டால் ஒருநாளைக்குச் சுமார் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக பிஸியாகவே உள்ளனர். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்களின் வாராந்திர வேலை நேரத்தினை சர்வதேச தொழிலாளர் மையம் கணக்கெடுப்புச் செய்து வெளியிட்டுள்ளது.
அதில் உலகிலேயே இந்தியப் பெண்கள் தான் அதிக அளவு வேலை செய்கின்றனராம். வாரத்தில் சராசரியாக 55 மணிநேரம் பணியாற்றுகின்றனர். அதிலும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்குத்தான் பணிச்சுமை அதிகமாக உள்ளது. அவர்கள் வாரத்திற்கு 56.5 மணிநேரமும், அடுத்ததாக அறிவியல், தொழில் நுட்பத் துறையில் உள்ள பெண்கள் வாரத்திற்கு 53.2 மணி நேரமும், ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் 46 மணிநேரமும் பணியாற்றுகின்றனர்.
வாரத்திற்கு 5 நாட்கள் பணி என்று எடுத்துக் கொண்டால் ஒருநாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்வதாக அந்த முடிவு தெரிவிக்கிறது. ஜெர்மனி நாட்டுப் பெண்கள் ஒரு வாரத்திற்கு 32 மணி நேரமும், ரஷ்யாவில் 40 மணிநேரமும் பணிபுரிவதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பெண்களின் வேலை வரம்பு நேரத்தினை வரைமுறைப்படுத்தும் சட்டத்தினை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.