மாஸ் ஹீரோக்களைப் படமாக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அதாவது கதைக்காக அவர்கள் கிடையாது. அவர்களைச் சுற்றித் தான் கதை வர வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் கூட ரஜினியிடம் முதலில் ஒரு கதையைச் சொல்ல அதுல கொஞ்சம் கமர்ஷியலைக் கலந்து கொண்டு வாங்க. ஏன்னா கோடிகள்ல முதல் போடுறாங்க.
அதை எடுக்கறதுக்கு அப்படி பண்ணினா தான் சரியா இருக்கும்னு சொன்னாராம். அப்புறம் அவர் அதற்காக லோகேஷ் பாணியிலோ, நெல்சன் பாணியிலோ என்னால கமர்ஷியலைக் கொண்டு வர முடியாது. வேணும்னா என்னோட பாணியில கமர்ஷியலா மாத்துறேன்னு சொன்னாராம். அப்புறம் உருவானது தான் வேட்டையனாம்.
ஜெய்பீம் என்ற படம் மூலம் பல்வேறு தரப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் தான் இயக்குனர் த.செ.ஞானவேல். என்கவுண்டர் என்பது வெறும் தண்டனை மட்டுமல்ல. குற்றங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க எடுக்கும் நடவடிக்கை. வேட்டையனில் வரும் மாஸ் வசனம் இது. இந்த வசனத்தை எழுதியவர் த.செ.ஞானவேல்.
அழுத்தமான கதைகளைப் படமாக்கும்போது மாஸ் ஹீரோக்களைக் கையாள்வதால் இயக்குனர்கள் தடுமாறுவதாக சில கருத்துக்கள் உலா வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி படம் அவருக்குப் பெரும் புகழைச் சேர்த்தன. இந்த இரு படங்களில் யார் நடித்து இருந்தாலும் கதை தான் ஹீரோ என்று விமர்சனங்கள் எழுந்தன. அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. எச்.வினோத் சதுரங்க வேட்டையில் மோசடி பற்றி எடுத்து இருந்தார். அடுத்து தீரன் அதிகாரம் 1 படத்தில் வடமாநில கொள்ளையர்களை மையக்கருவாக எடுத்துக் கொண்டார்.
இரு படங்களுமே உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதன் மூலம் அஜீத்துடன் இணைந்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். நேர்கொண்ட பார்வை, வலிமை சுமார் ரகம் தான். அடுத்ததாக நெல்சன். இவரது கோலமாவு கோகிலா, டாக்டர் என்ற இரு படங்களும் ஹிட்.
அடுத்ததாக விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் படத்துக்கு நெகடிவ் விமர்சனம் தான். முதல் இரு படங்களுக்கும் கதை தான் ஹீரோ. ஆனால் மாஸ் ஹீரோக்கள் வந்ததும் அது சுமாரானது.
இதைப் பார்க்கும்போது அழுத்தமான கதைகளை உருவாக்கும் படைப்பாளிகள் மாஸ் ஹீரோக்களைப் படமாக்கும்போது அழுத்தத்திற்கு உள்ளாகிறார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. முன்னணி ஹீரோக்களுக்கு இருக்கும் சந்தை மதிப்பு, அவர்களின் ரசிகர் பட்டாளம், பெரிய பட்ஜெட் உள்ளிட்டவை அதற்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கதையோ, கருவோ எளிய மக்களுக்கு எதிராக இல்லாதவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படி ஒரு படமாக வேட்டையன் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.