சொன்னது மட்டுமல்லாமல் செயலிலும் இறங்கிய கடலூர் மேயர்.. குவியும் பாராட்டு..

By John A

Published:

கடலூர் மாநகராட்சியில் உள்ள கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேயர் சுந்தரி ராஜா மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பின்னர் வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களின் காலணிகள் வகுப்பறைக்கு வெளியே விடப்பட்டிருந்தது. ஆனால் ஆசிரியர்கள் காலணி அணிந்து கொண்டு பாடம் நடத்தினார். இதனால் மேயர் சுந்தரி ராஜா ஆசிரியரிடம், “மாணவர்களிடம் நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறீர்களா?” என்று கேட்டார்.

அப்போது ஆசிரியை மாணவர்கள் காலணியுடன் வகுப்பறைக்குள் வருவதால் மண், தூசியினால் சுவாசப் பிரச்சினை ஏற்படுகிறது என்று கூற இனி வகுப்பறைக்குள் மாணவர்கள் காலணி அணிந்து தான் வரவேண்டும் என ஆசிரியரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அதே பள்ளிக்குச் சென்ற மேயர் வகுப்பறையைப் பார்த்ததும் குப்பைகளாகக் காட்சியளிக்க தூய்மைப் பணியாளர்கள் வர கால தாமதம் ஆனதால் தானே வகுப்பறையைக் கூட்டிச் சுத்தம் செய்தார். மேலும் அனைத்து வகுப்பறைகளுக்கும் மிதியடிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் வகுப்பறையைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

அன்று சொன்னது மட்டுமின்றி மீண்டும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என கள ஆய்வு செய்து மிதியடி வழங்கிய கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவை ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

பொதுவாகவே அரசுப்பள்ளிகளின் மீதான நம்பிக்கை பெற்றோர்களுக்கு அதிகரித்து வருகிறது. அரசுப்பள்ளிகளில் சேர்க்கையும் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு நிகரான தரத்தினை அரசுப் பள்ளிகளும் பெற்று வருகின்றன.