சென்னை: ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓஹோன்னு இருந்த டிப்ளமோ படிப்பு இன்று இப்படியாகிடுச்சே ஏங்கும் அளவிற்கு நிலைமை மாறி உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 18 ஆயிரம் இடங்களில், தற்போது வரை 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 இணைப்பு கல்லூரிகள், 32 அரசு உதவிப்பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 401 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதில், அரசு கல்லூரிகளில் 18 ஆயிரம் டிப்ளமோ படிப்பு இடங்கள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 11 ஆயிரம் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 1.21 லட்சம் இடங்களும் என மொத்தம் 1½ லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
டிப்ளமோ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவில், 50 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, டிப்ளமோ கல்லூரிகளில் நேரடி சேர்க்கை நடத்தப்பட்டது. இதன்மூலம் கிட்டத்தட்ட 7 ஆயிரத்து 500 மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், 57 ஆயிரத்து 500 மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உயர்வுக்கு படி சிறப்பு முகாம் மூலம் இதுவரை 127 மாணவர்களுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற 30 மாணவர்கள் நேரடியாக டிப்ளமோ படிப்பில் 2-ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் 350 மாணவர்கள் உயர்வுக்கு படி வாயிலாக டிப்ளமோ படிப்பில் இணைந்திருக்கிறார்கள். இதன்மூலம், உயர்வுக்கு படி முகாம் வாயிலாக 500 மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் இணைந்துள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தம் 58 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 18 ஆயிரம் இடங்களில், தற்போது 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. 6 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. தனியார் கல்லூரிகள் உள்பட தற்போது 92 ஆயிரம் இடங்கள் டிப்ளமோ படிப்பில் காலியாக இருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.