ஒரு காலத்தில் எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேலையோ, படிப்பையோ முடித்துவிட்டு ஊரில் இருக்கும் மக்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு இடத்தில் அரட்டை அடித்துக் கொண்டோ ஏதாவது விளையாடிக் கொண்டோ பொழுது போக்கி வந்தார்கள். ஆனால் காலத்தின் வளர்ச்சி மற்றும் கட்டாயத்தின் காரணமாக அடுத்தடுத்து இந்த செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றின் பரிமாணத்தால் மக்கள் பலரும் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
சிறுசு முதல் பெருசு வரை அனைவருமே கையில் போனை வைத்துக் கொண்டு சுற்றி தெரியும் சூழலில், பல விஷயங்களை குறித்த தகவல்களையும் அவர்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர். ஒரு காலத்தில் எல்லாம் சிறுவர்களாக இருப்பவர்களிடம் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள். ஆனால் இந்த காலத்தில் பெரியவர்களே போனும், கையுமாக சுற்றி திரிவதுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கூட தொலைக்காட்சிகளில் பார்ப்பது கிடையாது.
அந்த அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் மிகப் பெரிதாக இருக்க ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சமீபத்தில் செய்த விஷயம் மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. முன்பெல்லாம் பணத்தை கையில் வாங்கிக் கொண்டிருக்க இப்போது அனைவரும் கூகுள் பே, UPI உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பண பரிமாற்றம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
இதனால் நம் கையில் பணம் எடுக்க மறந்தாலும் அவர்கள் தொலைபேசி எண் கொண்டு பணத்தை நாம் யாருக்கு வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்ப முடியும். ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் இன்று கூகுள் பே பயன்படுத்தி கட்டணத்தை வசூலித்து வரும் சூழலில் தற்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஒரு படி மேலே போனது தான் இந்தியாவின் ரயில்வே அமைச்சர் வரைக்கும் கவனத்தை பெற்றுள்ளது.
செல்போனுக்கு அடுத்து வளர்ச்சியாக ஸ்மார்ட் வாட்ச்சை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில் கடிகாரம் போல கையில் கட்டிக்கொண்டு நாம் எங்கேயாவது வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தால் கூட யார் நம்மை அழைக்கிறார் என்பதை காண்பித்துக் கொடுத்துவிடும். இது தவிர இன்னும் பல வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் இருக்க ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கட்டணம் வசூலிப்பதற்கு ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி வருகிறார்.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் பெங்களூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருக்க, QR கோடு ஸ்கேன் செய்து UPI பணம் கட்டுவதை வைத்துள்ளார். இதனை பகிர்ந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘யுபிஐ ஸ்வாக். பண பரிமாற்றம் மிக எளிதாக நடக்கிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும் உண்மையில் அவர் ஒரு எஞ்சினியர் பட்டதாரி என்றும், இந்தியா தற்போது டிஜிட்டலாக மாறி விட்டது என்றும் பல வேடிக்கையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.