தென்னிந்திய சினிமா உலகின் இசைத்துறையில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்னும் அவரது குரல் மூலம் இரசிகர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஒருங்கிணைந்த மதராஸ் மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் அருகே உள்ள கொண்டம்பேட்டை என்ற கிராமத்தில் பிறந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அதன்பின் திரைத்துறையில் வாய்ப்புப் பெற்று முன்னனி பாடகராக மாறிய போது சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
இசையுலகில் கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் நிலா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பெற்றவர். இதுமட்டுமன்றி பழகுவதற்கு எளிய மனிதராகவும், நடிப்பு, இசை என அனைத்திலும் கால்பதித்து அதிலும் தனது தனித்திறமையைக் காட்டியவர். இசை உலகில் இவர் செய்யாத சாதனைகளே கிடையாது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, உருது, போஜ்புரி என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூச்சுக்குழாய் பிரச்சினையால் கடந்த 2020-ல் செப்டம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ரசிகர்களை கண்ணீர்க் கடலில் ஆழ்த்திய எஸ்.பி.பி. அவர் பாடிய பாடல்கள் மூலமாக அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள 6 தமிழ்த்திரைப்படங்கள்.. ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கே..!
எனவே அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவர் கடைசியாக வாழ்ந்து மறைந்த காம்தார் நகருக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என அவரது மகனும், திரைப்பிரபலமுமான எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் ஸ்டாலினுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் எஸ்.பி.பி. வாழ்ந்த காம்தார் நகர் அல்லது அவர் வசித்த தெரு இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு எஸ்.பி.பி பெயரைச் சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் எஸ்.பி.பி. சரண்.
இதேபோல் பல பிரபலங்களுக்கும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் அவர்கள் நினைவாகவும், அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையிலும் பிரபலங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.