சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?

  சென்னை: சென்னை கிண்டியில் 160.86 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இந்த இடத்தை 99 ஆண்டு குத்தகைக்காக தமிழக அரசு வழங்கிஇருந்தது. இதனை தற்போது மீட்டுள்ள தமிழக…

118 acres of huge park where Chennai Guindy Race Club used to function

 

சென்னை: சென்னை கிண்டியில் 160.86 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இந்த இடத்தை 99 ஆண்டு குத்தகைக்காக தமிழக அரசு வழங்கிஇருந்தது. இதனை தற்போது மீட்டுள்ள தமிழக அரசு கிண்டி ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பசுமை பூங்கா அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகரம் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 86.9 லட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது.

சென்னை பெருநகரின் பசுமை வெளியானது வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் மொத்த பரப்பளவில் வெறும் 6.7 சதவீதமாக தான் உள்ளது.

இது பிற இந்திய மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். ஆகவே, சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், சென்னை நகரமயமாக்குதலால், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மக்கள் தொகை பெருகிவரும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியமாகி உள்ளது.

சென்னை வாழ் மக்கள் தங்கள் உடல்நலனுக்காகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் போதுமான பொது இடங்களை உருவாக்க வேண்டிய நோக்கத்துடன் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள பசுமையான சூழலைக் கொண்ட பூங்காக்கள் அவசியம் ஆகும்.

ஆகவே, இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டியது உள்ளது. சென்னை நகரில் ஒரு பெரிய அளவிலான பூங்காவினை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது.

மேலும், சென்னை நகரத்தில் வசிப்பவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு ஏராளமான நன்மைகளை உருவாக்கிடவும், பசுமையான இடங்களை உருவாக்கி, பொதுப் பூங்காக்களைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாப்பதிலும் அரசின் முக்கிய பங்கு உள்ளது. பூங்காக்கள் மக்களின் உடல், மன நல ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சென்னையின் சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் ஏற்கனவே தனியார் அமைப்புகளிடம் இருந்த அரசு நிலங்களை மீட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரின் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஈடுகொடுத்திடும் வகையில் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றினை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் நிறுவுதல் மிக அவசியமானது.

அந்த அடிப்படையில் கிண்டி ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூபாய் 4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பரப்பளவில் உருவாக உள்ள இந்த பூங்கா, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும். இங்கு அமைக்கப்படவுள்ள பூங்காவானது, மக்களது மன மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், ஓய்வுக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மெருகேற்றுவதற்கும் வழிவகுக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.