இந்திய சினிமாவில் சில பாடகர்களின் குரல்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொஞ்சம் கூட பொலிவு மாறாமல் அப்படியே இளமையான குரலாக இசை பிரியர்களையும் ஆண்டு கொண்டே இருக்கும். அந்த வகையில், இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெரிய சொத்து தான் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இசை உலகில் அறிமுகமான போது எப்படி அவரது குரல் இளமை ததும்ப இருந்ததோ அதே போல தான் சுமார் 50 ஆண்டுகள் கழித்து பாடிய போதும் இருந்தது. பல பிரபல பாடகர்களுக்கும் வயதாகும் போது குரல்களில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஆனால், எஸ்.பி.பிக்கோ குரலில் சிறிய வித்தியாசம் கூட தோன்றவில்லை.
பாடலின் தன்மை என்ன என்பதை அறிந்து சோகம் என்றால் அதை குரலில் காட்டுவது, சந்தோச பாடல் என்றால் சிரித்துக் கொண்டே பாடுவது, காதலை சொல்லும் பாடல் என்றால் வெட்கத்துடன் பாடுவது என தனது குரலில் அந்த வித்தியாசத்தை காண்பித்து கொண்டே இருந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான். இவர் மறைந்தாலும் இவரது குரலில் உருவான பாடல்கள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்.
மௌன ராகம் திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடி இருந்த ‘நிலவே வா‘ பாடல் இன்றளவிலும் பலரது பிளே லிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது. இந்த பாடலின் ரெக்கார்டிங் நேரத்தில் நடந்த சம்பவம் பற்றி மறைந்த பாடகர் எஸ்பிபியின் மகனும், பிரபல பாடகருமான் எஸ்.பி. சரண் சில விஷயங்களை ஒரு ரியாலிட்டி ஷோவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“நிலவே வா பாடலுக்கு பின்னர் ஒரு பெரிய கதை இருக்கிறது. இந்த பாடலை ரெக்கார்டிங் செய்த சமயத்தில் இளையராஜா, படத்தின் இயக்குனர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குனர்கள் என யாருமே அங்கே இல்லை. இது கதையில் என்ன சூழல் என அப்பாவிடம் சொல்வதற்கும் யாரும் இல்லை.
அப்பா ஸ்டுடியோ போனதும் பாடல் வரிகளை எழுதி பிராக்டிஸ் செய்யவும் தொடங்கி விட்டார். பின்னர் ரெக்கார்டிங்கும் செய்து விட்டார்கள். ஆனால் படம் பார்த்த பின்னர் தான் அப்பாவுக்கு இது படத்தில் சோகமான சூழலுக்கு வரும் பாடல் என்பது தெரிந்துள்ளது.
மேலும் இந்த பாடலை கேட்ட பின்னர், ‘நான் இத ஒரு ரொமான்டிக் பாடல்னு தானே நெனச்சேன். இத சிரிச்சுகிட்டே தான் நான் பாடி இருப்பேன். நான் சோகமான பாட்டுனு தெரியாம தான் பாடுனேன். என்கிட்ட என்ன சிட்டுவேஷன் அப்படினு யாருமே சொல்லல. இல்லை என்றால் அந்த சூழலுக்கு ஏற்றார் போல நான் பாடி இருப்பேன்‘ என அப்பா அப்போது கூறினார்” என சரண் கூறி உள்ளார்.
அவர் கூறியது போலவே நிலவே வா பாடலை இந்த பின்னணி தெரிந்த பின்னர் கேட்டு பார்த்தால் எஸ். பி. பாலசுப்ரமணியம் சிரித்துக் கொண்டே பாடுவதும் நன்றாக தெரியும். அதே வேளையில், சோக பாடலுக்கு எஸ்பிபி சிரித்துக் கொண்டே பாடியதை ஹிட் பாடலாக மாற்றிய இளையராஜாவையும் பலர் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக நடிகர் மைக் மோகனும் சோகமாக இந்த பாடலை பாடி நடித்திருந்தது நம்மை எஸ்பிபியின் குரலில் இருக்கும் சிரிப்பை பற்றி நினைக்காமல் செய்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.