Kodaikanal | கொடைக்கானலில் நில அதிர்வு? 300 அடி தூரத்துக்கு பிளந்த பூமி.. மக்கள் அச்சம்

By Keerthana

Published:

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலையில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமம் கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழ்நாட்டின் கடைகோடி கிராமம் ஆகும். இங்கு வனப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் சுமார் 300 அடி தூரத்துக்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக புகைப்படம் வெளியாகி உள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண சூழலும், பசுமையான காடுகளும் ஏரளமான அருவிகளும், மலைக்காட்சி முனைகளும் உள்ளன. இந்த காலநிலையை அனுபவித்தபடி இங்கு சுற்றுலா தலங்களை ரசிக்க ஏரளமானோர் தினமும வருகிறார்கள். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

கொடைக்கானல் மலைப்பகுதி என்பது நகர் பகுதி என்பதை தாண்டி, இயற்கை எழில் கொஞ்சும் ஏராளமான மலைக்கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இவை மேல்மலை கிராமங்கள், கீழ்மலை கிராமங்கள் என 2 பகுதிகளாக அமைந்துள்ளன. இதில் இதில் மேல்மலையில் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிளாவரை கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமம் கிட்டத்தட்ட கேரள மாநில எல்லையை அமைந்துள்ளது.

கிளாவரையில் சுமார் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்காக ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட செருப்பனூத்து ஓடை பகுதியில் குடிநீர் எடுக்கப்படுகிறது. அந்த தண்ணீர் அங்கிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கிளாவரைக்கு கொண்டுவரப்படும்.

இந்தநிலையில் செருப்பனூத்து ஓடையில் உள்ள கால்வாய் பகுதியில் சுமார் 300 அடி தூரத்துக்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொடைக்கானல் வனப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதால் இதுபோன்று விரிசல் ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் நிலத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது போன்று வீடியோ காட்சிகளும் வெளியானது.

கேரள மாநிலம் வயநாட்டில் சமீபத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இந்த நிலையில் கொடைக்கானலில் நில அதிர்வு ஏற்பட்டதாக பரவிய இந்த வீடியோ காட்சிகள் அதில்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கிளாவரை கிராம மக்கள் கூறுகையில், கிளாவரை கிராமத்துக்கு செருப்பனூத்து ஓடையில் இருந்து கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் ஓடை பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது செருப்பனூத்து ஓடை கால்வாய் சுமார் 6 அடி ஆழத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 300 அடி தூரத்திற்கு உள்வாங்கியபடி கால்வாயில் பிளவு ஏற்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் கால்வாயில் பிளவு ஏற்பட்டு இருக்கலாம் என்றார்கள்.

இதுகுறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜலிங்கம் கூறும் போது, “கடந்த சில நாட்களில் கொடைக்கானலில் நில அதிர்வு தொடர்பாக எதுவும் பதிவாகவில்லை. தமிழகத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களிலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் நில அதிர்வு குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை” என்று விளக்கம் அளித்தார்.