விமானத்தில் மோசமான முதல் வகுப்பு.. பயண கட்டணமான ரூ.5.30 லட்சத்தை திரும்ப தந்த ஏர் இந்தியா

By Keerthana

Published:

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் அனிப் படேல், அண்மையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பில் வந்தார். அவர் வந்த விமானத்தில் தரமற்ற வகையில் முதல் வகுப்பு இருந்தாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு டிக்கெட் கட்டணமான ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை ஏர் இந்தியா திரும்ப கொடுத்தது.

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபரான அனிப் படேல் என்பவர் சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்தார். 15 மணி நேரம் இடைநில்லா பயணம் என்பதால் படேல் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்துக்கு டிக்கெட் வாங்கி விமானத்தில் முதல் வகுப்பு பிரிவில் பயணித்து வந்துள்ளார்.

விமானத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேபின் மிகவும் மோசமாக தரமற்ற நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த படேல் பழுதடைந்த நிலையில் இருந்த முதல் வகுப்பு கேபினை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில் அவர், “வழக்கமாக ஏர் இந்தியா சேவையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இருக்கையில் தலை முடியும், குப்பைகளும் சிதறி கிடந்துள்ளது. ஹெட்போன்கள் உடைந்து இருந்தது. வழக்கமாக வழங்கப்படும் உணவுகளில் 30 சதவீத உணவுகள் வழங்கப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், பலரும் கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டார்கள். இந்த சர்ச்சையை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் படேல் வழங்கிய டிக்கெட் கட்டணமான ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்தை அவருக்கு திருப்பிக் கொடுத்துள்ளது.