பங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!

By Bala Siva

Published:

 

இந்தியாவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நிய பங்கு முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சியில் இந்தியா, சீனாவை முந்தியுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, இந்திய பங்குச் சந்தை 22.27%  உயர்ந்துள்ளது, ஆனால் சீனாவின் பங்குச் சந்தை மதிப்பீடு 21.58%  மட்டும் உள்ளது. உலகின் முன்னணி நாடுகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து மோர்கன் ஸ்டான்லி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில மாதங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர், இதுவரை ரூ.53,100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பத்து நிறுவனங்கள் ஐ.பி.ஓ மூலம் ரூ.17,047 கோடி நிதி திரட்டி உள்ளது, இது கடந்த 27 மாதங்களில் இல்லாத உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டில் இதுவரை 56 நிறுவனங்கள் ஐ.பி.ஓ மூலம் ரூ.65,000 கோடி நிதி திரட்டி உள்ளன; 2023 ஆம் ஆண்டில் 20 நிறுவனங்கள் மட்டும் சுமார் ரூ.15,000 கோடி நிதி திரட்டி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு $4 டிரில்லியன் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதத்திற்கு அது $5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 6 மாதங்களில் $1 டிரில்லியன் டாலர் மதிப்பில் உயர்வு ஏற்பட்டுள்ளது, இது மிகப்பெரிய வளர்ச்சி ஆகும். மேலும், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 0.5 டிரில்லியன் டாலர் அதிகரித்து, இந்திய பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு $5.5 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.