இந்தியாவை பொருத்தவரை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.1000 அல்லது ரூ.5000 ரூபாய் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், அதற்கும் குறைவாக, அதாவது 100 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடியுமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. இதற்கான பதில் ‘முடியும்’ என்பது தான்.
கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்யும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் குறைவான சம்பளம் கிடைக்கும் நிலையில், அந்த சம்பளத்தில் ஓரளவு மிச்சப்படுத்தி 100 முதல் 500 ரூபாய் வரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
அவர்களுக்கு என சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், பந்தன் மியூச்சுவல் ஃபண்ட், டி.எஸ்.பி மியூச்சு வல் ஃபண்ட், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட், டாடா மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மியூட்சுவல் பண்டுகளில் மாதம் 100 ரூபாய் முதலீடு செய்யலாம்.
எனவே, குறைந்த தொகையாக இருந்தாலும், எந்த வகையான திட்டங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு, அதில் முதலீடு செய்து நீண்ட காலத்திற்கு கொண்டு சென்றால், ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கேற்ப, மாதம் 100 ரூபாய் சேமித்தாலும், அது லட்சக்கணக்கில் மாறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல், தினசரி ஊதியம் அல்லது வார ஊதியம் கிடைப்பவர்களுக்கும் வசதியாக சில மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. தினசரி மற்றும் வாராந்திர எஸ்ஐபி முறைகள் இருக்கும் நிலையில், தினசரி ஊதியம் வாங்குபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.