தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஊனமுற்றோர் என்பதை கலைஞர் கருணாநிதி இனி இவ்வாறு அழைக்கக் கூடாது என தனித்துறையை கடந்த 2010-ல் ஏற்படுத்தி மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என உருவாக்கினார். இதற்கு மாற்றுத் திறனாளிகளிடத்திலும், பொதுமக்களிடமும் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழக அரசு மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை, பேருந்து ரயில் பஸ் பாஸ், அனைத்து இடங்களிலும் முன்னுரிமை, தொழில் தொடங்க இலவச உபகரணங்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை இருமடங்காக அதிகரித்து வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய் என்றும்;
6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய் என்றும்; 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாய் என்பதை 12 ஆயிரம் ரூபாய் என இருமடங்காக உயர்த்தியும், மேலும், தொழிற் கல்லூரிகளிலும், பட்ட மேல்படிப்புகளிலும் படிக்கின்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 7 ஆயிரம் ரூபாய் என்பதை 14 ஆயிரம் ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆராய்ச்சிப் படிப்பில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மாற்றுத்திறனாளிகள் 50 பேரைத் தேர்ந்தெடுத்து தலா ரூ. 1 லட்சம் வீதம் 50 லட்சம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.