சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்

By Keerthana

Published:

சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செப்டம்பர் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில், 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை பாக்கி சுமார் 731 கோடி ரூபாயை கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தவில்லை. இதனை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு செப்டம்பர் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவில், செப்டம்பர் 24ம் தேதி நிலத்தை ஒப்படைக்க கடைசி நாள் என்பதால், இந்த உரிமையியல் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வழங்குவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை அரசு இன்னும் சுவாதினம் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், நிலத்தை ஒப்படைக்க 24ம் தேதி கடைசி நாள் என்பதாலும், பதில் மனு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆகியோர் ஆகியோர் பதில் அளித்து வாதிடுகையில், ஏற்கனவே நிலம் சுவாதினம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் வேண்டும் என வலியுறுத்தினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, நிலத்தை அரசு இதுவரை சுவாதினம் எடுக்கவில்லை என்று ரேஸ் கிளப் தரப்பிலும், ஏற்கனவே சுவாதினம் எடுத்துகொள்ளப்பட்டது என்று அரசு தரப்பிலும் கூறப்படுவதாக சுட்டிக்காட்டி, உரிமையியல் வழக்கை உடனடியாக விசாரிக்ககோறும் மனுவுக்கு செப்டம்பர் 23ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.