வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகள்.. ஒரு உடலை அடக்கம் செய்ய செலவு கணக்கு எவ்வளவு தெரியுமா?

By John A

Published:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய பேரழிவாக மாறியது. இக்கோர இயற்கைப் பேரழிவில் புதை மணலில் சிக்கியும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும் சுமார் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளான சூரமலை, முண்டக்கை போன்றவை முற்றிலும் உருக்குலைந்து போனது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்பட்டது.

மேலும் மீட்புப் பணியில் ராணுவத்தினைச் சேர்ந்த 12 குழுக்கள், தேசியர் பேரிடர் மீட்புப் படையினர், தமிழகத்தினைச் சேர்ந்த மீட்புப் படையினர் உள்ளிட்ட குழுக்கள் இரவு,பகல் பாராமல் மீட்புப் பணியினை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் நிலைமையை சீராக்கினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிற்கு உதவிகள் குவிந்தன. மேலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அரசியல், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகள் என பலரும் உதவித் தொகை அளித்தனர். தற்போது அந்தப் பகுதியில் நிலைமை சீராகி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். பொதுமக்களும் அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திவால் ஆகிறதா கிச்சன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் டப்பர்வேர்.. பங்கு விலை 57% சரிவு..!

இந்நிலையில் வயநாடு பகுதியில் நிவாரணப் பணிகளுக்கான செலவு அறிக்கையை மத்திய அரசுக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ அரசு அறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில் எந்தப் பணிகளுக்கு எவ்வளவு செலவழிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பணிக்கு ஒரு உடலுக்கு 75,000 வீதம் 359 உடல்களுக்கு ரூ. 2.76 கோடி செலவும், இராணுவத்தினர் அமைத்த பெய்லி பாலத்திற்கு ரூ. 1கோடியும், தன்னார்வலர்கள் மற்றும் மீட்புப் படையினருக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ரூ. 10 கோடியும், தன்னார்வலர்கள், வி.ஐ.பிகள், மீட்புப் படையினர் தங்கும் குடில்களுக்கு ரூ. 15 கோடியும், மீட்புப் படை ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப் படையின் விமானங்களுக்கு ரூ. 17 கோடியும், டார்ச், குடை, ரெயின்கோட் போன்றவை வாங்க ரூ. 15 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அந்த செலவின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செலவின கணக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பலர் குளறுபடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் கூறிவருகின்றன.