திவால் ஆகிறதா கிச்சன் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் டப்பர்வேர்.. பங்கு விலை 57% சரிவு..!

By Bala Siva

Published:

 

இல்லத்தரசிகளை கவரும் வகையில் கிச்சன் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்த டப்பர்வேர் என்ற நிறுவனம் திவாலாகப் போவதாக வெளியாகியிருக்கும் செய்தியை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் 57% குறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர்டைட் கண்டெய்னர் உள்பட, உலக அளவில் பல பிரபலமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் டப்பர்வேர் நிறுவனம், கிச்சன் மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை சொத்துக்கள் வைத்திருக்கும் இந்நிறுவனத்தின் கடன், 1 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர் வரை இருப்பதாகவும், 2020 ஆம் ஆண்டு முதல் லாபத்தில் சறுக்கியதால், இந்நிறுவனம் 700 மில்லியன் டாலர் கடன் செலுத்துவதை தாமதம் செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கடன் கொடுத்தவர்களின் நெருக்கடிக்காக, தற்போது திவால் நடவடிக்கை தேவையான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் ஆரம்பத்தில் கிச்சன் பொருட்களை விற்பனை செய்து வந்த டப்பர்வேர் நிறுவனம், 1996 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் நுழைந்தது. டெல்லி உள்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்நிறுவனத்தின் பொருட்கள் நல்ல விற்பனையாகி வந்த நிலையில், தற்போது திடீரென பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிறுவனம் திவாலானது குறித்த தகவல் வெளியானதை அடுத்து, செப்டம்பர் 16ஆம் தேதி ஒரே நாளில் நிறுவனத்தின் பங்கு விலை 57% வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.