ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் மக்கள் தொகை வசிக்கும் நாடுகளில் ஒன்று ஜிம்பாவே. இதன் தலைநகர் ஹராரே. பெரும்பாலும் வறட்சி நிறைந்த பகுதி. இதுவரை நாம் கிரிக்கெட்டில் மட்டுமே ஜிம்பாவே நாட்டை நாம் ரசித்து வந்த நிலையில் ஜிம்பாவே நாட்டிற்று மற்றொரு முகமும் உண்டு. அதுதான் இங்கு நிலவும் வறட்சி.
மிக மோசமான காலநிலையால் மழையின்றி விவசாயம் பாதிக்கப்பட்டு தற்போது மக்கள் உணவுக்காவே அல்லாடும் நிலை வந்துவிட்டது. இதனால் அங்கே பட்டினிச் சாவு உருவாகி வரும் சூழலில் அங்கே அதிகம் காணப்பபடும் யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு அளிக்க ஜிம்பாவே அரசு முடிவு செய்துள்ளது.
ஜிம்பாவேயில் உள்ள ஹாவங்கே தேசியப் பூங்காவில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவின் தேவை மிக அதிகமாக உள்ளதால் சுமார் 200 யானைகளை வேட்டையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சுமார் 50 யானைகள் கொன்று அதன் மாமிசம் உணவாக அளிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 200 யானைகள் கொல்லும் இந்த முடிவிற்கு உலகம் முழுவதிலுமுள்ள சுற்றுச் சூழல், வன உயிரின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக அண்டை நாடான நமீபியாவிலும் இதேபோன்று பஞ்சம் ஏற்பட அங்கு சுமார் 700 வகையான வனவிலங்குகள் கொல்ல அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் 83 யானைகள், 30 நீர்யானைகள், 60 காட்டெருமைகள், 50 இம்பாலாக்கள், 300 வரிக்குதிரைகள் மற்றும் 100 இலாண்ட்கள் (Elands) ஆகிய அடங்கும்.
தற்போது ஜிம்பாவே நட்டில் சுமார் 1,30,000-க்கும் அதிகமான ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. முறையான அரசு அனுமதி கிடைத்தவுடன் 200 யானைகளை வேட்டையாடும் பணி தொடங்கும் என அந்நாட்டின் வன உயிரின மேலாண்மை, தேசிய பூங்காக்கள் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.