பொதுவாக கே.பாலச்சந்தர் படங்கள் என்றாலே பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அப்படி கே. பாலச்சந்தர் இயக்கிய படங்களில் நடிகை சுகாசனிக்கு நல்ல அடையாளத்தினைக் கொடுத்த படம் தான் மனதில் உறுதி வேண்டும். அவள் ஒரு தொடர்கதை, தண்ணீர் தண்ணீர் ஆகிய படங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். 1987-ல் வெளியான இப்படத்தில் சுஹாசினியுடன் ஸ்ரீதர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக், ரமேஷ் அர்விந்த், லலிதா குமாரி ஆகியோர் நடித்திருப்பர்.
நடிகர் விவேக்-க்கு இதுதான் முதல் திரைப்படம். மேலும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு நடிகராகவும் இதுதான் முதல் திரைப்படம். இப்படி பலவகைகளிலும் சிறப்புப் பெற்ற இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு முக்கிய அம்சம் தான் வங்காளக் கடலே பாடல். இளையராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இப்பாடலில் சுகாசினி சினிமா நடிகர்களுடன் ஆடுவதாக லலிதா குமாரி நினைத்துப் பார்ப்பார். இப்பாடலில் சத்யராஜ், விஜயகாந்த் மற்றும் ரஜினி காந்த் ஆகிய மூவரும் நடனமாடி இருப்பார்கள்.
ஜானி மாஸ்டர் ஆட்டத்தை நிறுத்திய தெலுங்கு சினிமா நடன இயக்குநர் சங்கம்.. பாலியல் புகார் எதிரொலி..
இந்தப் பாடலில் மொத்தமுள்ள மூன்று சரணங்களில் இறுதி சரணத்தில் நடிக்க முதலில் கமல்ஹாசனை அணுகினாராம் கே.பாலச்சந்தர். ஆனால் சுகாசினி இது நன்றாக இருக்காது. ஏனெனில் சொந்த சித்தப்பாவுடன் ஜோடி சேர்ந்து ஆடுவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் எனக்கும் அதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். கமலும் இதே பதிலைக் கூறியிருக்கிறார். மேலும் கார்த்திக், பிரபு ஆகியோரை ஜோடி சேர்க்கலாம் என்றிருக்கிறார்.
அதன்பின் கே.பாலச்சந்தர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி மூன்றாவது சரணத்தில் ரஜினியை ஆட வைத்திருக்கிறார். முதல் இரு சரணங்களில் சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரும் ஆட, மூன்றாவதாக ரஜினிகாந்த் சுகாசினியுடன் ஜோடி சேர்ந்து ஆடியிருப்பார். இந்தப் பாடலில் நடித்ததற்காக விஜயகாந்த் எந்த ஊதியமும் பெறவில்லையாம்.
இன்றும் இந்தப் பாடல் தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான முயற்சியான பாடலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.