லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்ததால் 1000 தீவிரவாதிகள் உள்பட 2750 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் 8 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் நாட்டில் முக்கிய அரசியல் கட்சியாகவும் துணை ராணுவ அமைப்பாகவும் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாவை, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் இந்த அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் கடந்த பல ஆண்டுகளாக மோதல் நிலவிக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 30-ந்தேதி, இஸ்ரேல் ராணுவம் லெபனானில் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான புவாட் ஷூகர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இரு தரப்புகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி, ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பழைய பேஜர் சாதனங்களை தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நேற்று லெபனானின் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த பேஜர்கள் திடீரென வெடித்து சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை 2750 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் 8 பேர் பலியானதாகவும் தெரிகிறது.
அமெரிக்காவின் முன்னணி ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின்படி, இந்த பேஜர்களில் உள்ள லித்தியம் பேட்டரிகள் இஸ்ரேலின் சைபர் தாக்குதலால் அதிக சூடாக்கப்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.