அமேசான் நிறுவனத்தில் இதுவரை ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணி செய்து வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல், வாரத்தில் 5 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என தலைமை செயல் அதிகாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்தில் ஐந்து நாட்கள் கண்டிப்பாக அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டும் என தலைமை செயல் அதிகாரி விடுத்துள்ள உத்தரவு, ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக, ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஊழியர்களின் நலன் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், பல ஊழியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இது குறித்து தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில், வாடிக்கையாளர்களுக்கும் வணிகத்திற்கும் மிகச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்றால், கண்டிப்பாக ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் காரணமாகத்தான் Work From Home என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டதால் இந்த வசதியை தொடர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இது ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் வாரத்தின், ஐந்து நாட்களிலும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில், ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.