இலங்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ரத்து செய்யப்படும் என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் சுமார் ரூ.3,700 கோடி செலவில், 484 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கக்கூடும் என்றும், இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அதற்கெதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இலங்கையில் செப்டம்பர் 21-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த அரசியல் விவாத நிகழ்ச்சியில் அனுர குமார திசநாயக்க பேசியபோது, ‘இலங்கையின் எரிசக்தி துறை சுயாதீனத்திற்கு அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதை ரத்து செய்வோம்” என்று கூறினார்.