தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஜானர் வகையிலான திரைப்படங்களுக்கும் நிறைய ரசிகர்கள் கூட்டம் இங்கே உள்ளது. அதிலும் சில நேரம் குறிப்பிட்ட ஒரு ஜானரில் இருந்து திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானால் அதே வரிசையில் நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு பேய் படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து நிறைய பேய் படங்களும் வெளியாவதை நாம் கவனித்திருப்போம்.
ஆனால் காமெடி ஜானரில் எப்போது திரைப்படம் ரிலீஸ் செய்தாலும் அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு காரணம் மன உளைச்சலில் திரையரங்கிற்குள் நுழையும் ரசிகர்கள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தாலே அனைத்து கவலைகளையும் மறந்து சந்தோஷமாக வெளியே செல்வார்கள். அப்படிப்பட்ட காமெடி திரைப்படங்களின் வரவு தற்போது குறைவாக இருந்தாலும், சில எவர்கிரீன் காமெடி திரைப்படங்களும் இங்கே இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் எம். ராஜேஷ் இயக்கத்தில் முதல் திரைப்படமாக உருவான ‘சிவா மனசுல சக்தி’ எப்போது பார்த்தாலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை வர வைக்கக்கூடிய திரைப்படமாகும். ஜீவா, சந்தானம், அனுயா, ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளால் நிறைந்திருந்த சூழலில் தற்போதும் தொலைக்காட்சியில் போட்டால் அதை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் தயாராக உள்ளது.
அந்த அளவுக்கு சந்தானம், ஜீவா, ஊர்வசி உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்த இந்த படத்தில் நடித்த ஒரு முக்கிய நடிகரைப் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். நடிகை அனுயாவின் நண்பராக ஜீவாவை எரிச்சல் அடைய வைக்கக்கூடிய கதாபாத்திரத்தில் ஆனந்த் சாமி என்ற நடிகர் நடித்திருந்தார். நடிகையின் காதலன் என இவரை தப்பாக நினைத்து ஜீவா செய்யும் அட்ராசிட்டி காமெடிகள் அதிகம் வரவேற்பையும் பெற்றிருந்தது.
சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்ற ஆனந்த் சாமி, அதன் பின்னர் பெரிய அளவில் திரைப்படங்களில் தோன்றாமல் தான் இருந்தார். அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்த ஆனந்த் சாமி, சமீபத்தில் வெளியான தங்கலான் மற்றும் ரகுதாத்தா ஆகிய இரு படங்களிலும் தோன்றியிருந்த நிலையில் அவர் சிவா மனசுல சக்தியில் வரும் நடிகரா என பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
இதற்கு காரணம் அந்த படத்தில் நடித்த சந்தானம், ஜீவா என அனைவருமே தற்போதும் இளமையாக இருக்க, ஆனந்த் சாமியோ வயதான ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதிலும் தங்கலான் படத்தில் கைலாசம் என்ற கதாபாத்திரத்தில் ஒரு 50 – 55 வயதுள்ள நபராக அவர் நடித்திருந்த சூழலில் தான் பலருக்கும் அவர் சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடித்த நடிகர் என்பது தெரியாமல் போய்விட்டதும் குறிப்பிடத்தக்கது.