விநாயகர் சதுர்த்தி என்பது இந்தியாவின் பல மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் நடைபெறும் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். தங்களின் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ விநாயகர் சிலையை களிமண்ணில் தயார் செய்து அதனை ஒரு சில தினங்கள் வைத்து மனதில் வேண்டிய காரியங்களை நினைத்து பூஜையில் ஈடுபடுவார்கள்.
தங்களின் குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் மற்ற பல விஷயங்களை பற்றியும் இறைவனிடம் வேண்டி கேட்டுக் கொண்ட பின்னர் அந்த விநாயகர் சிலையை கடலிலோ அல்லது நீர்நிலை இருக்கும் இடங்களிலோ சென்று கலைப்பது வழக்கம். விநாயகர் சதுர்த்தி என்பது மிகப்பெரிய ஒரு பண்டிகையாக தமிழகம் தொடங்கி வடமாநிலங்கள் வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒரு எதிர்பாராத சம்பவம் அரங்கேறி உள்ளது.
மேற்கு பெங்களூருவின் விஜயநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இராமையா மற்றும் அவரது மனைவி உமாதேவி ஆகியோர். இவர்கள் சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது தங்கள் வீட்டில் கணபதி சிலை ஒன்றை வைத்து அதனை வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த விநாயகர் சிலைக்கு சுமார் 4 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் மலர்கள் உள்ளிட்டவை அணிந்து பூஜை செய்து வந்துள்ளனர். தங்கள் பூஜை முடிந்த பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த விநாயகர் சிலையை இரவு 9 மணி அளவில் நீரில் கரைக்க கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பாக அந்த தங்க செயினையும் அவர்கள் எடுக்க மறந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் விநாயகர் சிலையை கரைத்து விட்டு வீட்டிற்கு திரும்பிய பின்னர் தான் தங்க செயினை அதோடு சேர்த்து கரைத்தது அறிந்து அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். உடனடியாக பதறிப் போன ராமையா மற்றும் உமாதேவி ஆகியோர் சில உறவினர்களை அழைத்துக் கொண்டு தாங்கள் நீரில் கரைத்த இடத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இரவு 10 மணிக்கு மேல் அந்த பகுதிக்கு செல்ல, அங்கே இருந்த சிறுவர்களிடம் தங்க செயின் பற்றி கேட்டுள்ளனர். அப்போது அதில் ஒருவர் தாங்கள் செயின் ஒன்றை விநாயகர் சிலை மீது பார்த்ததாகவும் ஆனால் கவரிங் என நினைத்து அப்படியே அந்த சிலையுடன் போட்டு விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
உடனடியாக இது பற்றி போலீஸாருக்கும் தகவல் கொடுக்க இரவு தொடங்கி காலையில் வரை சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியில் நிறைய விநாயகர் சிலையையும் கரைத்ததால் களிமண் அதிகமாக இருக்க முதலில் தங்கச் செயினை தேடுவதில் சிரமம் இருந்துள்ளது.
இப்படி பல தடைகள் கடந்து அவர்கள் தேடிய நிலையில் தான் மறுநாள் மதியம் சுமார் 12:30 மணியளவில் அந்த தங்க செயினும் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதனை உமாதேவி மற்றும் ராமையா ஆகியோரிடம் போலீஸார் உதவியுடன் ஒப்படைக்க இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.