தமிழ் சினிமாவில் கலகல காமெடிப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா படம் முதல் கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் வரை இவரது படங்களில் காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. கவுண்டமணி செந்திலுடன் ஆரம்பித்த இவரது கூட்டணி அடுத்து விவேக், வடிவேலு, சந்தானம், சூரி, யோகி பாபு, சதீஷ் என அனைத்து காமெடி நடிகர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து கலகலப்பான படங்களை தமிழ் சினிமாவிற்குக் கொடுத்தார்.
குறிப்பாக வடிவேலுவை வைத்து இவர் இயக்கிய வின்னர், கிரி, லண்டன், ரெண்டு போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்கள் வயிற்றை சிரிப்பால் பதம் பார்த்ததுடன் எவர் கிரீன் காமெடி லிஸ்ட்டிலும் இணைந்தது. மேலும் சுந்தர் சி-யும் வடிவேலுவும் இணைந்து நடித்த படங்களான தலைநகரம், நகரம் போன்ற படங்களின் காமெடியும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் ஹிட் காமெடி ரகம். இவர்கள் காம்போவில் வந்த அனைத்து காமெடிகளின் வசனங்களும் தமிழ் மக்கள் வாழ்வுடன் ஒன்றிப் போனதுதான் சிறப்பம்சமே.
எதைக் கொடுக்கணுமோ அதைத் தான் கொடுக்கணும்… எல்லாத்தையும் கொடுத்தா ஜெயம் ரவி நிலைமை தான்..!
இப்படி பல ஹிட் படங்களைக் கொடுத்த இவர்களது காம்போ தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ளது. அரண்மனை 4 வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர் சி கேங்கர்ஸ் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதில் சுந்தர் சி ஹீரோவாக நடித்து வருகிறார். அவருடன் மீண்டும் வடிவேலு இணைந்துள்ளார். இப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் கேங்கர்ஸ் சிங்காரம். இவர்களுடன் கேத்ரின் தெரசா, மைம் கோபி, முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவின் திரைப்பயணம் இனி கேரக்டர் ரோல்கள் மட்டுமே இருக்கும் என்று எண்ணியிருந்த வேளையில் மீண்டும் காமெடி அவதாரம் எடுத்து பழைய கைப்புள்ளயாக அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி விட்டார் வடிவேலு.