இன்று சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வரும் அதே வேளையில் இதில் நிறைய எதிர்மறையான விஷயங்களை தான் நாம் பார்க்க முடிகிறது. ஒரு நடிகரின் ரசிகர்கள் இன்னொரு நடிகரை தாக்குவதும், உண்மை என்ன என்பது தெரியாமல் தமக்கு பிடிக்காமல் இருக்கும் ஒருவர் செய்த விஷயத்தை பெரிய பேசு பொருளாக்கி அதில் வதந்திகளை கிளப்பி விடுவதும் என எங்கு திரும்பினாலும் நிறைய நெகட்டிவ் விஷயங்கள் தான் நம் பார்வையில் படுகிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி அடிக்கடி நம்மை தெம்பு ஏற்றக்கூடிய அல்லது நமக்கு ஒரு விதமான பாசிட்டிவ் புத்துணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையிலான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகள் கூட மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று நெகிழவும் வைக்கும். அந்த வகையிலான ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி பார்ப்போரை கண்கலங்கவும் வைத்துள்ளது.
இது தொடர்பாக நீலம் என்ற பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்தின் படி, அவரும் அவரது பெண் குழந்தையும் ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அருகே ஒரு வயதான தம்பதியினர் இருந்துள்ளனர். அவர்கள் நீலமின் குழந்தையை கொஞ்சிய போது திடீரென எமோஷனல் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்ட தகவலின் படி தனது மகளை அழைத்து அந்த வயதான தம்பதிகள் அவருடன் சில நேரம் விளையாடவும் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த சமயத்தில் அதில் கணவராக இருந்த நபர் திடீரென கண்ணீர் விட்டதுடன் அவரது மனைவியோ அழுவதை நிப்பாட்டுங்கள் என்றும் கூறி தேற்றி உள்ளார்.
இதை அந்த பெண் குழந்தையின் தாய் கவனித்ததாக கூறப்படும் நிலையில், அந்த முதியவர் கண்ணீர் விட்ட காரணம் தான் தற்போது அனைவரையும் மனம் நெருட வைத்துள்ளது. அந்த வயதான தம்பதிகளின் மருமகள் பேரப்பிள்ளைகளை அதிகம் விளையாட விடாமல் மிக கண்டிப்புடன் வளர்த்து வருவதாகவும் தங்களுடன் கூட அவர்களுக்கு விளையாட நேரம் ஒதுக்காமல் இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அவர்களின் பேரக்குழந்தையை போல இருக்கும் அந்த சக பயணியின் குழந்தையை பார்த்ததும் எடுத்து விளையாடியதுடன் கண்ணீர் விடவும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வரும் நிலையில் குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப ரசிக்க விடுங்கள் என்றும் இது போன்று வயதானவர்களின் மத்தியில் பாசத்தை கூட கொடுக்காமல் கண்டிப்புடன் வளர்த்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.